இந்தியா

6வது திருமணத்தை தட்டிக்கேட்ட 3வது மனைவியை விவாகரத்து செய்த முன்னாள் அமைச்சர்!

Published

on

உத்தரபிரதேச மாநிலத்தில் 6வது திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர் ஒருவரை மூன்றாவது மனைவி தட்டி கேட்டதை அடுத்து அவரை விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் பஷீர். அதன்பின்னர் பஷீர், மாயாவதி கட்சியிலிருந்து விலகி அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைந்தார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பஷீருக்கு ஏற்கனவே 5 முறை திருமணம் ஆகியுள்ள நிலையில் ஆறாவது முறையாக சைஸ்தா என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அவரது மூன்றாவது மனைவி நக்மா இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பஷிரை நேரில் சந்தித்து வாக்குவாதம் செய்தபோது திடீரென உன்னை நான் விவாகரத்து செய்வதாக முன்னாள் அமைச்சர் பஷிர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த மூன்றாவது மனைவி நக்மா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தனக்கும் பஷீருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்றும் திருமணத்திற்குப் பின்னர் அவர் தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தினார் என்றும், பலமுறை எனக்கு விருப்பம் இல்லாமலேயே கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டார் என்றும் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் பஷீர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைச்சர் பஷீர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் ஒரு சில நாட்கள் அவர் சிறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மூன்றாவது மனைவி நக்மா அடித்து துன்புறுத்தியதோடு, விவாகரத்து செய்துவிட்டு ஆறாவது முறையாக திருமணம் செய்த முன்னாள் அமைச்சர் பஷீர் மீது காவல்துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version