ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல் துறைக்கு ஆச்சர்யம் கொடுத்த பட்ஜெட்.. வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையால் என்ன பலன்?

Published

on

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தாண்டு பட்ஜெட் அறிவிப்பின் போது ஆட்டோமொபைல் துறைகளுக்கு பெரிதும் உதவ கூடிய ஸ்க்ராப்பேஜ் குறித்து அறிவித்தார்.

ஏற்கனவே பொருளாதார மந்த நிலையால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்திய ஆட்டோமொபைல் துறை கொரோனா காலத்தில் மொத்தமாக முடங்கி விட்டது என்றே கூறலாம். வாகனங்கள் விற்பனை பாதிக்கப்பட்டதால் நிறைய தொழிற்சாலைகளில் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தான் இவற்றுக்கு பதில் நடவடிக்கையாக வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சோதனை:

அதன்படி, இனி 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த கார் போன்ற பயணிகள் வாகனங்களும், 15 ஆண்டுகள் பழமை வாய்ந்த லாரி உள்ளிட்ட வர்த்தக வாகனங்களும் ஃபிட்னஸ் சோதனை செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு ஃபிட்னஸ் சோதனைக்கும் சுமார் 40 ஆயிரம் வரை செலவு ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ஃபிட்னஸ் சோதனையில் தேர்ச்சி பெற்ற வாகனங்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். இந்த ஃபிட்னஸ் சான்றிதழ் ஐந்து ஆண்டுகளுக்கு பொருந்த கூடியது. அதேநேரம் கூடுதலாக பசுமை வரியும் விதிக்கப்படும். சாலை வரியில் இருந்து 10 முதல் 25 சதவிகிதம் பசுமை வாரியாக வசூலிக்கப்படும். ஆனால் நகரத்திற்கு நகரம் இது மாறுபடும்.

டெல்லி உள்ளிட்ட அதிக காற்று மாசுபாடு இருக்க கூடிய பகுதிகளில் 50 சதவிகிதம் வரை வசூலிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஸ்கிராப்பேஜ் கொள்கையின் கீழ், இந்தியாவில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் 20 ஆண்டுகள் பழமையான 50 லட்சம் வாகனங்களும், 15 ஆண்டுகள் பழமை வாய்ந்த 34 லட்சம் வாகனங்களும் அகற்றப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும் இதன் மூலம் வாகன மாசுபாடு 25 சதவீதம் வரை குறைகிறது . ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பின்னர் மூலப்பொருட்களை வழங்கும் திறனைக் கொண்டுள்ளன.

சலுகை வழங்கும் அரசு:

ஒருவேளை வாகனம் ஃபிட்னஸ் சோதனையில் தோல்வியடைந்தால் அதன் பதிவு ரத்து செய்யப்படும். அவ்வாறு ரத்து செய்யப்பட்ட வாகனத்தை சாலையில் ஓட்டுவதும் சட்டப்படி குற்றமாகும். அதேசமயம் Voluntary Vehicle Scrappage Policy படி, பழைய வாகனங்களை நொறுக்கி அகற்றிவிட்டு புதிய வாகனங்களை வாங்கினால் இதற்கு தேவையான சில நிதி மற்றும் வரிச் சலுகைகளை அரசே வழங்கும். இதன் மற்றொரு பயன்பாடு, நகர்ப்புற மாசு அளவைக் குறைப்பதற்கும், வாகன விற்பனையை ஊக்குவிப்பதற்கும் உதவும். இதன் மூலம் நுகர்வோர்கள் பழைய வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனங்கள் வாங்க உந்து சக்தி கிடைக்கிறது. மேலும் பழைய வாகனங்கள் சாலைகளில் இருந்து அகற்றப்படும் போது காற்று மாசு நீங்குவதால் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக அமையும்.

2022, ஏப்ரல் 1 முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே ஒரு ஸ்கிராப்பேஜ் கொள்கை திட்டத்தை அரசாங்கத்திற்கு ஆய்விற்காக அனுப்பியுள்ளார். இது தொடர்பான விரிவான விவரங்களை மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் போது வாகன ஸ்க்ராப்பேஜ் கொள்கை குறித்த அறிவிப்புகள் வெளியானவுடன் ஆட்டோ மொபைல் துறை சார்ந்த பங்கு வர்த்தகம் அதிகரித்துள்ளததும் குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version