தமிழ்நாடு

இரவுநேர ஊரடங்கால் அதிகாலையிலேயே பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள்!

Published

on

தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து இன்று அதிகாலையிலேயே வெளியூர் செல்லும் பொதுமக்கள் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எந்தவிதமான போக்குவரத்தும் இருக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து இரவு முழுவதும் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் இன்று அதிகாலை 4 மணிக்கு தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல தொடங்கி விட்டனர்.

மேலும் ஆட்டோ கார் ஆகியவற்றில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் இன்று காலை அதிகரித்ததாக தெரியவந்தது. இன்று காலை 4 மணி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் தேனீர் கடைகள் உள்பட ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

முதல் நாள் இரவு நேர ஊரடங்கை அனுபவித்த பொது மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக அதிகாலையிலிருந்தே வெளியே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியூர் செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருவதாகவும் சென்னையை விட்டு பலர் காலி செய்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக வெளி மாநிலத்தில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் தங்களது மாநிலத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதனால் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமல் ஆனது என்பதும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் புதுவையில் முழு ஊரடங்கு உத்தரவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version