இந்தியா

மோடி அரசுக்கு சம்மட்டி அடி: குடியரசு தினத்தன்று டெல்லியில் 100 கிலோ மீட்டர் ‘டிராக்டர் பேரணி’… விவசாயிகள் உறுதி!

Published

on

மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பெருந்திரளான விவசாயிகள் டெல்லியில், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 60 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் குடியரசு தினமான 26 ஆம் தேதியன்று, டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தி மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க உள்ளது உறுதி என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மிகப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

புதிய வேளாண் சட்டங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது மட்டும்தான் போராடும் விவசாயிகளின் ஒரேயொரு கோரிக்கையாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் மத்திய அரசு, ‘தேவையென்றால் கொண்டு வந்துள்ள விவசாயச் சட்டங்களில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். ஆனால், சட்டத்தைத் திரும்பப் பெற முடியாது’ என்று விடாப்படியாக இருக்கிறது. இதுவரை விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் 12 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆனால், எந்தப் பேச்சுவார்த்தையிலும் இரு தரப்புக்கும் இடையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனால், தங்களது போராட்டங்களைத் தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக மத்திய அரசு, கடைசி சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது, ‘வேளாண் சட்டங்களை அமல் செய்வதறை ஒன்றரை ஆண்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். போராட்டங்களை கைவிடுங்கள்’ என்றது. ஆனால், ‘நாங்கள் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யச் சொல்கிறோம். தற்காலிக அல்லது இடைக்காலத் தடை எந்த வித நன்மையும் பயக்காது’ என்று நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்டனர்.

அந்த வகையில், நாட்டின் குடியரசு தினமான வரும் 26 ஆம் தேதி, லட்சக்கணக்கான டிராக்டர்கள் கொண்டு டெல்லியில் பேரணி சென்று மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க விவசாயிகள் ஆயத்தம் ஆகி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்தப் போராட்டத்துக்கு எதிராக வாதாடிய மத்திய அரசு, ‘இப்படியான பேரணி நம் நாட்டின் குடியரசு தினத்தன்று நடந்தால் அது நாட்டிற்கே மிகப் பெரிய அவமானமாக முடியும்’ என்றது. ஆனால் உச்ச நீதிமன்றம், ‘விவசாயிகளைப் போராடக் கூடாது என்று சொல்லும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அவர்கள் போராட்டத்தை எங்களால் தடுக்க முடியாது’ என்று கூறிவிட்டது.

இப்படியான சூழலில் டெல்லி மாநில போலீஸ், விவசாயிகளின் இந்த மிகப் பெரும் டிராக்டர் பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்கிறது. அதே நேரத்தில் விவசாயிகள் தரப்பு, ‘பேரணி எப்படியும் நடந்தே தீரும். காவல் துறை எங்களுக்கு கூடிய விரைவில் அனுமதி கொடுக்கும்’ என்கிறது. இந்தப் பேரணி நடந்தால், அசம்பாவித சம்பங்கள் நிகழலாம் என்று அரசுத் தரப்பு எச்சரிக்கை விடுத்தும் விவசாயிகள், ‘நாங்கள் அற வழியில் மட்டும் தான் போராட்டத்தை அரங்கேற்றுவோம். எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாது’ என்று உறுதி அளித்திருக்கிறார்கள். அடுத்து வரும் நாட்களில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகளை முடுக்கிவிடும் என்று தெரிகிறது.

 

Trending

Exit mobile version