இந்தியா

டெல்லி எல்லையில் போராடுபவர்களை குண்டுக்கட்டாக தூக்கியெறிய முயன்ற போலீஸ்; கண்ணீர் மல்க பேட்டியளித்த விவசாய சங்கத் தலைவர்- அடுத்து என்ன?

Published

on

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான கடந்த 26 ஆம் தேதி, டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டனர் விவசாயிகள். ஆனால், 26 ஆம் தேதி, போலீஸ் விதித்தக் கட்டுப்பாடுகளை மீறி டிராக்டர் பேரணியை ஆரம்பித்தனர் விவசாயிகளின் ஒரு பிரிவினர். அவர்கள், செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாய சங்கக் கொடியை ஏற்றினர். இந்த சம்பவத்தால் விவசாயிகளுக்கும் போலீஸுக்கும் இடையில் கடும் மோதல் வெடித்தது. சிலர் உயிரிழந்தனர். இதுவரை எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் நடந்து வந்த இந்தப் போராட்டத்தில் முதன்முறையாக கலவரம் வெடித்தது பெரும் பேசு பொருளாக மாறியது. இதையடுத்து சில விவசாய சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றன. இதனால், மீதியிருக்கும் போராட்டமும் நீர்த்துப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக டெல்லியின் பல எல்லைகளில் பல்வேறு விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதில் டெல்லி – உத்தர பிரதேச எல்லையில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை அப்புறப்படுத்த உ.பி மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. உ.பி போலீஸ் நேற்று நள்ளிரவு வரை விவசாயிகளை அங்கிருந்து குண்டுக்கட்டாக தூக்கியெறி கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை.

குறிப்பாக உ.பி – டெல்லி எல்லையில் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் விவசயா சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயட், ‘உச்ச நீதிமன்றம், அற வழியில் அமைதியாக போராடுவதை அனுமதித்துள்ளது. இந்தப் பகுதியில் எந்த வன்முறைச் சம்பவங்களும் நடக்கவில்லை. அப்படி இருந்தும் உத்தர பிரதேச அரசு, துடுக்கத்தனமான நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இது தான் இந்த அரசின் உண்மை முகம்’ என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தார். இதனால் காசிபூர் எல்லையில் பெருந்திரளான விவசாயிகள் மீண்டும் கூடி வருகின்றனர். போராட்டங்கள் நீர்த்துப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உ.பி மாநில காவல் துறையின் நடவடிக்கையால், மீண்டும் அது வீரியமடைந்துள்ளது.

காசிபூர் எல்லையில் மட்டுமல்லாது, டெல்லியின் மற்ற எல்லைகளிலும் பாதுகாப்புப் படையினர் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர். இனி எந்த வித வன்முறைச் சம்பவங்களும் நடந்து விடக் கூடாது என்பதற்காக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையான விவசாயிகள், ‘குடியரசு தின வன்முறையை நிகழ்த்தியது போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மிகவும் சில பேர் தான். அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். எங்கள் போராட்டம், எங்களது கோரிக்கைகளை நிறைவேறும் வரை அமைதியான முறையில் தொடரும்’ என்று திட்ட வட்டமாக கூறியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version