இந்தியா

அடுத்ததாக நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் – விவசாயிகள் அதிரடி அறிவிப்பு; என்ன செய்யும் மத்திய அரசு?

Published

on

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 65 நாட்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்றனர். கடைசியாக அவர்கள் குடியரசு தினமான, ஜனவரி 26 ஆம் தேதி, டிராக்டர் பேரணி நடத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். இந்நிலையில் மீண்டும் மத்திய அரசின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் புது வித போராட்ட யுக்தியைக் கையில் எடுக்க உள்ளனர்.

அதன்படி, வரும் சனிக்கிழமை நாடு தழுவிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர். அதன்படி சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கம் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்குக் கடந்த சில நாட்களாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல போராட்டக் களத்திற்கு மின்சார வசதி மற்றும் தண்ணீர் வசதியையும் துண்டித்துள்ளது அரசுத் தரப்பு. இதற்கு எதிராகவும் போராட்டம் செய்து வருகின்றனர் விவசாயிகள்.

மேலும் நேற்று, தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2021 மீதும் விவசாய சங்கத் தலைவர்கள் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். ‘விவசாயிகள் இந்த பட்ஜெட்டில் முழுவதுமாக புறந்தள்ளப்பட்டு உள்ளார்கள். வேளாண் துறைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப் பட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கடைசியாக குடியரசு தினத்தன்று விவசாயிகள், டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணி, வன்முறையில் முடிந்தது. அதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அன்றைய தினம், விவசாயிகளின் ஒரு பகுதியினர் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு, தேசியக் கொடிக்கு பதிலாக தங்களது கொடியை ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்படி வன்முறையில் முடிந்த பேரணியால், விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்கிற குரல்கள் எழுந்து வருகின்றன. அதே நேரத்தில் பெரும்பான்மையான விவசாய சங்கங்கள், ‘எங்கள் போராட்டம் அற வழியில் மட்டும் தான் நடக்கும். வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் வெளியில் இருந்து ஊடுருவி போராட்டத்தை குலைக்க முயல்கிறார்கள். அனைத்து வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை’ எனத் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version