இந்தியா

டெல்லியில் செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்; போலீஸுடன் கடும் மோதல்! – ஒரு விவசாயி பலி?

Published

on

டெல்லியில் இன்று தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்திய பெருந்திரளான விவசாயிகள், செங்கோட்டையை முற்றுகையிட்டு உள்ளனர். அங்கு விவசாயிகளுக்கும் போலீஸுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்தான காணொலிகள் வெளி வந்து அதிர்ச்சி கிளப்பியுள்ளன. இந்த மோதல் காரணமாக ஒரு விவசாயி பலியாகி இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. விவசாயிகள் மற்றும் காவல் துறையினருக்கு இடையில் நடந்து வரும் மோதல் காரணமாக டெல்லியே போர்க்களம் போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் தான் விவசாயிகள், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட முடிவு செய்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால், டெல்லி எல்லைகளிலேயே இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம் செய்து வருகின்றனர். இன்று செங்கோட்டையை முற்றுகையிட்டு ராம்லீலா மைதானத்தையும் கைப்பற்றி உள்ளனர் விவசாயிகள். இனிமேல் விவசாயிகளின் போராட்டம் இந்த மைதானத்தில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு, சென்ற ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வைத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல குடியரசு தினமான இன்று ‘டிராக்டர் பேரணி’ நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தன.

பேரணிக்கு டெல்லி போலீஸிடம் அனுமதி கேட்டது விவசாயிகள் தரப்பு. முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்த போலீஸ், பின்னர் மத்திய அரசின் குடியரசு தின அணிவகுப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படா வண்ணம் ஒரு பாதையில் பேரணி நடத்திக் கொள்ளலாம் என்று கூறி அனுமதி வழங்கியது. அதன்படி மத்திய அரசின் குடியரசு தின அணிவகுப்பு முடிந்தவுடன், இன்று மதியம் 12 மணிக்கு மேல் விவசாயிகளின் பேரணி நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று காலை முதலே டெல்லி எல்லைகளில் பெரும் அளவிலான விவசாயிகள் கூடத் தொடங்கினார்கள். அவர்கள் 12 மணி வரை பொறுத்திருக்காமல் 9 மணி அளவிலேயே பேரணியை ஆரம்பித்துள்ளனர். பேரணியைத் தடுக்க போலீஸ் தரப்பில் போடப்பட்டிருந்த தடைகளை தகர்த்தெறிந்து விவசாயிகள் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால் பல இடங்களில் போலீஸுக்கும் விவசாயிகளுக்கும் மோதல் வெடித்துள்ளது.

 

Trending

Exit mobile version