இந்தியா

உச்சக்கட்ட போராட்டத்தை அறிவித்த விவசாயிகள்- திக்குமுக்காடும் மத்திய அரசு!

Published

on

டெல்லியில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் விவசாயிகளின் போராட்டம் வீரியமடைந்து வரும் நிலையில், அடுத்தக்கட்ட போராட்ட யுக்தியைக் கையிலெடுத்துள்ளது விவசாயிகள் தரப்பு. அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி, மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, தேசிய அளவில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்களாம்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்னும் நோக்கில், கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி, நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கும் போராட்டம் செய்தனர் விவசாயிகள். இதன்படி நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளை பிப்ரவரி 6, மதியம் சில மணி நேரங்கள் முடக்கித் தங்களது எதிர்ப்பைக் காட்டினார்கள் விவசாயிகள். வட இந்தியாவின் பல்வேறு முக்கிய சாலைகள் இதன் மூலம் முடக்கப்பட்டன. இந்நிலையில் அவர்கள் ரயில் மறியல் போராட்டத்தைக் கையிலெடுத்து உள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் குறித்து நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘உங்கள் போராட்டங்களை முடித்துக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் உட்கார்ந்து பேசி சுமூகத் தீர்வை எட்டலாம். நாடாளுமன்றம் சார்பில் உங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு நான் அழைக்கிறேன்.

ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். குறைந்தபட்ச அடிப்படை ஆதார விலை என்பது விவசாயப் பயிர்களுக்கு இருக்கும். அது இந்தச் சட்டங்கள் மூலம் அகற்றப்படாது. நாம் அனைவரும் முன்னேற வேண்டும். வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். வேளாண் சட்டங்கள் மூலம் வரும் சீர்திருத்தங்கள் எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version