கிரிக்கெட்

இன்றும் மீண்டும் ஏமாற்றம் கொடுத்த ஹிட்மேன்.. கடைசி 6 இன்னிங்சில் ஒரேயொரு அரைசதம் தான்!

Published

on

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா வெறும் 12 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் கொடுத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது.அடுத்து விளையாடிய இந்திய அணி மிகப்பெரிய இலக்கை நோக்கி ஆடுவதால் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முயற்சி செய்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இருப்பினும் புஜாரா 73, பண்ட் 91, வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களும் எடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்கள் எனும் டீசண்ட் ஆன ரன்களை எடுத்தது.

முதல் இன்னிங்சில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா வெறும் 6 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் கொடுத்தார். பின்னர் இரண்டாவது இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து 178 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்ததால் இந்திய அணிக்கு வெற்றி பெற 420 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இன்று இந்திய அணிக்கு மிக குறைந்த நேரங்களே மீதம் இருந்த நிலையில் விக்கெட்டை காப்பாற்ற முயற்சிக்கும் என அனைவரும் எதிர்பார்த்த போது ரோஹித் சர்மா 12 ரன்களில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல பீல்டிங்கின் போது எளிதான கேட்ச் ஒன்றையும் தவறவிட்டு மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தினார்

ஒரேயொரு அரைசதம் மட்டுமே :

கொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பிறகு ரோஹித் சர்மா விளையாட வந்த போதே அவர் அதிக எடையுடன் அவதி படுவதாகவும் ஐபிஎல் போட்டிகளின் போது முழு பார்மில் இல்லை என்றும் சொல்லப்பட்டது. அதற்கேற்ப ஐபிஎல் தொடரின் போது காயம் அடைந்து கஷ்டப்பட்டார். இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. பின்னர் நீண்ட விவாதத்திற்கு பிறகு பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய பிட்னஸை நிரூபித்தவுடன் டெஸ்ட் தொடரில் மட்டும் சேர்க்கப்பட்டு கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்றார். அந்த இரண்டு போட்டிகளிலும் 44, 7, 26, 52 என எடுத்தார். ரோஹித் சர்மா கடைசியாக ஆடிய 6 இன்னிங்ஸில் ஒரே ஒருமுறை மட்டுமே அரைசதம் அடித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணி நிலையான ஓப்பனிங் வீரர்கள் இல்லாமல் தடுமாறி வந்த வந்தது. பிரிதிவி ஷா, மாயங்க் அகர்வால் என ஓப்பனிங் இறங்கியவர்கள் ஏமாற்றமே கொடுத்தனர். கடைசியாக ஷுப்மன் கில் வந்து அந்த இடத்தை பூர்த்தி செய்தார். அதற்குள்ளாகவே மற்றொரு ஓப்பனிங் வீரரான ரோஹித் சர்மா பார்ம் இழந்து கஷ்டப்பட்டு வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வரும் நேரத்தில் இந்தியா இந்த தொடரை குறைந்தது 2-1 அல்லது 2-0 எனும் கணக்கில் வெற்றிபெற வேண்டும். இங்கிலாந்து 3-1 எனும் கணக்கில் வெற்றி பெற்றால் அந்த பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். அதே போல தொடர் 2-2, 1-1 என சமநிலையில் முடிவடைந்தால் ஆஸ்திரேலியாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். இவற்றை தவிர்க்க வேண்டுமானால் ஆஸ்திரேலிய தொடரில் ஆடியது போல ஒவ்வொரு வீரரும் தன்னுடைய முழு திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version