இந்தியா

சட்டமே படிக்காமல் 2 ஆண்டுகளாக வாதாடிய போலி பெண் வழக்கறிஞர்! திடீர் தலைமறைவால் பரபரப்பு!

Published

on

சட்டமே படிக்காமல் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக வழக்கில் வாதாடிய பெண் போலி வழக்கறிஞர் ஒருவர் திடீரென தலைமறைவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா என்ற பகுதியைச் சேர்ந்த ஜெசிசேவியர் என்ற இளம்பெண் சட்டம் படிக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வாதாடி உள்ளார். அவர் தன் மீது எந்த சந்தேகமும் இல்லாமல் இருப்பதற்காக சீனியர் வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக பணியில் சேர்ந்து, தான் இறுதியாண்டு சட்டக்கல்லூரி மாணவி என்று கூறி அவரிடம் இண்டர்ன்ஷிப் ஆக சேர்ந்துள்ளார்.

மேலும் பார் கவுன்சிலில் தனது பெயரை பதிவு செய்து, 2019ஆம் ஆண்டு உறுப்பினராகவும் ஆகி நீதிமன்றத்தில் பல வழக்குகளில் வாதாடி உள்ளார். அதுமட்டுமின்றி பார்கவுன்சில் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரத்தில் சட்டம் படித்ததாகவும் அதன்பின் அங்கு படிப்பை தொடர முடியாததால் பெங்களூரில் மீதி படிப்பை முடித்ததாகவும் அவர் அனைவரிடமும் கூறி வந்தார்.

இந்த நிலையில் திடீரென பார் கவுன்சிலுக்கு சமீபத்தில் மொட்டை கடிதம் ஒன்று வந்தது. அதில் ஜெசி சேவியர் சட்டம் படிக்கவில்லை என்றும் அவர் ஒரு போலி வழக்கறிஞர் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து பார் கவுன்சில் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் சட்டம் படிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெசி சேவியர் தலைமறைவாகி விட்டதாகவும் அவரை போலீசார் தேடி வருவதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. தற்போது போலி வழக்கறிஞர் ஜெசிசேவியை போலீசார் தேடி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version