தொழில்நுட்பம்

WhatsApp-ல் இனி நமது பிரைவஸி அவ்ளோதானா..?- சில வதந்திகளும் விளக்கங்களும்

Published

on

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாட்டிங் செயலி வாட்ஸ்அப். அதன் பிரைவஸி கொள்கைகளில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அந்த தேதிக்குள் வாட்ஸ்அப்பின் மாற்றப்பட்ட பிரைவஸி கொள்கைகளுக்கு, அதைப் பயன்படுத்தும் நபர் அனுமதி கொடுக்கவில்லை என்றால், செயலியை பயன்படுத்த முடியாது என்று நோட்டிஃபிகேஷன் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த மாற்றப்பட்ட பிரைவஸி கொள்கை மூலம், இனி வாட்ஸ்அப்பில் நாம், நமது நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பேசும், பகிர்ந்து கொள்ளும் உரையாடல்கள், புகைப்படங்கள், காணொலிக் காட்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் பார்க்க முடியும் என்று பரவலாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த தகவல்களை மூன்றாம் தரப்பினரிடமும் வாட்ஸ்அப் விற்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

இப்படி பரவிய தகவல்களால் வாட்ஸ்அப்பை பலர், தங்கள் ஸ்மார்ட் போன்களில் இருந்து நீக்கிவிட்டனர். பலர் ‘சிக்னல்’ மற்றும் ‘டெலிகிராம்’ போன்ற சாட்டிங் செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.

இந்நிலையில் இந்த ‘தகவல்களுக்கு’ முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் வாட்ஸ்அப் சில விளக்கங்களைக் கொடுத்துள்ளது. அவை பின் வருமாறு:

1.உங்கள் தனிப்பட்ட மெஸேஜ்களையோ அல்லது அழைப்புகளை வாட்ஸ்அப்பால் பார்க்க முடியாது. ஃபேஸ்புக் நிறுவனமும் அதைப் பார்க்காது.

2.நீங்கள் மெஸேஜ் செய்யும் அல்லது அழைக்கும் நபர்களுடைய தரவுகளை வாட்ஸ்அப் சேமிக்காது.

3.நீங்கள் வாட்ஸ்அப் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் லொகேஷன்களை வாட்ஸ்அப் நிறுவனம் பார்க்காது. ஃபேஸ்புக்கும் பார்க்காது.

4.உங்கள் கான்டேக்ட்களை வாட்ஸ்அப் நிறுவனம், ஃபேஸ்புக்கிடம் பகிர்ந்து கொள்ளாது.

5.வாட்ஸ்அப் குழுக்கள் பிரைவஸியுடன் இயங்கும்.

6.நீங்கள், உங்கள் வாட்ஸ்அப்பில் இருக்கும் மெஸேஜ்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கிக் கொள்ளலாம்.

7.நீங்கள் உங்கள் தரவுகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

பொதுவாக, ‘இனி வாட்ஸ்அப்பில் பகிரப்படும் எந்த தகவல்களுக்கும் உத்தரவாதம் கிடையாது’ என்று பலரும் தெரிவித்து வரும் நிலையில், இப்படியான விளக்கத்தை வாட்ஸ்அப் நிறுவனத் தரப்பு கூறியுள்ளது. இது எந்தளவுக்கு மக்களிடம் எடுபடும் என்று தெரியவில்லை.

கடந்த சில நாட்களில் வாட்ஸ்அப் குறித்து தொடர்ச்சியாக பரபரப்பட்ட இந்த மாதிரியான தகவல்களால், சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

டெலிகிராம் தரப்பும், வாட்ஸ்அப்பின் இந்த புதிய பிரைவஸி பாலிசியை கடுமையாக விமர்சித்து வருகிறது. ‘இது வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம், தங்கள் பயனர்களை மதிக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. ஃபேஸ்புக் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளது டெலிகிராம் நிறுவனத் தரப்பு.

 

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version