தமிழ்நாடு

“அதிமுகவைக் காப்பாற்றுவேன் என ஜெ., பிறந்தநாளன்று தீபம் ஏற்றுங்கள்!”- ஈபிஎஸ் – ஓபிஎஸ் எழுதிய வினோத கடிதம்!

Published

on

அதிமுகவினர் அனைவரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதியன்று, தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்னும் இரண்டே மாதங்களில் நாம் மீண்டும் ஒரு பரீட்சையை சந்திக்க உள்ளோம். இதில் நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருந்தாலும், எதிரிகளும், துரோகிகளும் கைகோர்த்துக் கொண்டு எப்படியாவது நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். இவர்களை யெல்லாம் நம் உழைப்பாலும், உத்வேகத்தாலும், ஒற்றுமை உணர்வாலும், மக்கள் மீதுள்ள நேசத்தாலும், திசை மாறா விசுவாசத்தாலும் தோற்கடித்து, மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும்.

இந்த குறிக்கோளோடு கழகக் கண்மணிகள் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோளை விடுக்கிறோம். பிப்ரவரி 24 – மக்களை கண் இமைபோல காத்த கடவுள் அம்மாவின் பிறந்த நாள்! இந்த பொன்னாளன்று நீங்கள் ஒவ்வொருவரும் ‘என் இல்லம் அம்மாவின் இல்லம்’ என்று உளமார நினைத்துக் கொண்டு உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றி, கண்களை மூடியவாறு உள்நோக்கிப் பார்த்து, நம் ஒப்பற்ற தலைவியின் புனித ஆன்மாவிடம் பிரார்த்தனை செய்து, கீழ்க்கண்ட உறுதிமொழியை எங்களுடன் இணைந்து எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உறுதிமொழி:

‘உயிர்மூச்சுள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அண்ணா – திமுக இயக்கத்தையும் காப்பேன்! இது அம்மா மீது ஆணை!’

வரும் தேர்தலிலும் ஜெயித்து எதிரிகளை வீழ்த்தி, வரும் நூறாண்டுகளுக்கும் அன்பை மட்டுமே வளர்த்து, கோட்டையில் நம் கொடியை உயர பறக்கச் செய்வோம். இது உறுதி’ என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version