கிரிக்கெட்

செம்ம மேட்ச்: சூப்பர் ஓவர் வரை சென்று உலகக் கோப்பையை முகர்ந்தது இங்கிலாந்து!

Published

on

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முதன் முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 242 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே நியூசிலாந்து அணியை போல ரன் குவிக்க தடுமாறியது. ஆனால் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டது. ஆனால் ஜாஸ் பட்லர் ஆட்டமிழந்த பின்னர் ஆட்டம் நியூசிலாந்து பக்கம் திரும்பியது. இருந்தாலும் கடைசி வரை பென் ஸ்டோக்ஸ் வெற்றிக்காக போராடினார். கடைசி பந்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட பென் ஸ்டோக்ஸால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.

உலகக் கோப்பை போட்டியில் ஆட்டம் சமனில் முடிந்தது மிகவும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை நடத்தப்பட்டது. சூப்பர் ஓவருல் இங்கிலாந்து சார்பில் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் பந்துவீசினார். அந்த ஓவரில் 15 ரன்கள் அடிக்கப்பட்டது. பின்னர் 16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்தின் ஜிம்மி நீஷமும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து சார்பில் பந்துவீசினார்.

முதல் ஐந்து பந்துகளில் நியூசிலாந்து அணி 14 ரன்கள் அடிக்க மீண்டும் 1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பவுண்டரிகளின் எண்ணிக்கையை வைத்து இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல்முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. பென் ஸ்டோக்ஸுக்கு ஆட்ட நாயகன் விருதும், கேன் வில்லியம்சனுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version