கிரிக்கெட்

21 வருடத்திற்கு பிறகு நடந்த சம்பவம்.. சென்னை டெஸ்டில் வென்ற இங்கிலாந்தின் பல்வேறு சாதனைகள்!

Published

on

சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் 21 வருடங்களாக சென்னையில் எந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது இல்லை என்கிற வரலாற்றை இங்கிலாந்து இப்போது மாற்றியுள்ளது. மேலும் ஆசிய பிராந்தியத்தில் அதிக தொடர் வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியாவின் மற்றொரு சாதனையையும் நெருங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நம்பிக்கையோடு இருந்த இந்திய அணிக்கு கடந்த நான்கு நாட்களும் மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.

இந்தியாவில் அதுவும் சென்னையில் வைத்து கடந்த 21 வருடங்களில் இந்திய அணி எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை சந்தித்தது கிடையாது. மேலும் தங்களுக்கு வசதியாக பிட்ச் வடிவமைக்கப்பட்டு விட்டது. கண்டிப்பா வெற்றி நம் பக்கம் தான் என அசால்டாக இருந்த இந்திய அணிக்கு போட்டியின் முதல் நாளில் இருந்தே இங்கிலாந்து அணி அடி மேல் அடி கொடுத்தது. முதல் இன்னிங்சில் இந்தியர்களின் பவுலிங் பெரியளவில் இங்கிலாந்திடம் எடுபடவில்லை.

கேப்டன் ஜோ ரூட் 200 ரன்களை எடுக்க முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங்கிலும் சொதப்பிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் நான்காவது நாள் ஆட்டத்தின் போது மட்டும் இந்திய அணியின் கை கொஞ்சம் ஓங்கியது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணியை 178 ரங்களுக்குள் சுருட்ட முடிந்தது.

இதனால் இந்திய அணி வெற்றி பெற 420 ரன்கள் டார்கெட் கொடுக்கப்பட்டது. நேற்று ஒரு விக்கெட்டை மட்டும் பறிகொடுத்திருந்த இந்திய அணி இன்று காலை போட்டி தொடங்கியதில் இருந்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் விராட் கோலி மட்டும் முடிந்தவரை போராடினார். இருப்பினும் மறுபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில் 192 ரன்களுக்கு இந்தியா ஆள் அவுட் ஆனது. இதன் மூலம் முதல் டெஸ்டில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

Also Read: INDvENG – இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்விய இந்தியா – வரலாற்று வெற்றிக்குப் பின் வரலாற்றுத் தோல்வி!

பல்வேறு சாதனைகள்:

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த போட்டியில் பெரிய வித்தியாசங்களுடன் வெற்றி பெற்றுள்ளதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே போல ஆசிய பிராந்தியத்தில் அதிக தொடர் வெற்றிகளை பெற்ற ஆசியாவை சேராத நாடு என்கிற ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்ய இன்னும் ஒரு வெற்றி மட்டுமே உள்ளன.

2002 முதல் 2004 வரையிலான கால கட்டத்தில் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பெற்றதே இதுவரை சாதனையாக உள்ளது. இங்கிலாந்து அணி 2018-ல் இலங்கையை 3-0 என வீழ்த்தியது, கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை தொடரில் 2-0 என வீழ்த்தியது மற்றும் இந்த வெற்றி என 6 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது இங்கிலாந்து அணி.

அதே போல கடந்த 21 வருடங்களில் சென்னையில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்ததே இல்லை என்கிற சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 1999-ல் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது. அந்த போட்டியில் கடைசி வரை சச்சின் போராடியிருப்பார். அதே போல தான் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலியின் போராட்டமும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதற்குள்ளாகவே போட்டி முடிவடைந்தது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான்.

seithichurul

Trending

Exit mobile version