கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவை தூக்கி வீசிய இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

Published

on

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு அதிரடியாக நுழைந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலியா அணி 14 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கோரி ஜோடி மட்டுமே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்கள் 103 ரன்கள் குவித்தனர். பின்னர் வந்தவர்களும் இங்கிலாந்தின் அனல் பறக்கும் பந்துவீச்சில் சொற்ப ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் மற்றும் ரஷித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதனையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணித்த இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், மோர்கன் என களமிறங்கிய அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடியதால் இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கிறிஸ் வோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி வரும் 14-ஆம் தேதி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை சந்திக்கின்றன. இந்த இரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பையை வெற்றிபெறாத அணி ஆகும். இங்கிலாந்து அணி 27 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடைசியா நடந்த 5 உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா 4 முறை கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version