இந்தியா

மீண்டும் எமர்ஜென்சி வந்திருக்கிறது: வைகோ மாநிலங்களவையில் ஆவேசம்!

Published

on

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதையடுத்து, இதற்கு எதிராக மாநிலங்களவையில் குரல் கொடுத்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநிலங்களவையில் இது தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பில், காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் உள்நாட்டு பாதுகாப்புப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே அது சட்டமன்றத்துடன் கூடிய தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்படுகிறது. மேலும் லடாக் பகுதியைத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருவதால், லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகச் செயல்படும் என கூறினார் அமித் ஷா.

இந்த அறிவிப்பை கேட்ட அடுத்த நொடியிலேயே மாநிலங்களவையில் அமளி வெடித்தது. எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு காஷ்மீர் பிரிக்கப்படுவதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக காஷீர் பிரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

மீண்டும் எமர்ஜென்சி வந்திருக்கிறது என்று மாநிலங்களவையில் ஆவேசமாக குரல் எழுப்பினார் வைகோ. அவரை இருக்கையில் அமரச் சொன்ன மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு, எமர்ஜென்சி இல்லை அர்ஜென்சி என்று வைகோவுக்கு பதிலளித்தார். இதனையடுத்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்தும் காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியல் சாசன பிரிவு 370 நீக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

Trending

Exit mobile version