தமிழ்நாடு

வெளிநாடு சென்றாலும் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்கப்போவதில்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வருகிறது. முதல்வர் வெளிநாட்டுக்கு செல்லும் போது அவரது துறை சார்ந்த பொறுப்புக்களை ஏதாவது ஒரு அமைச்சரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் இந்தமுறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்புக்களை யாரிடமும் ஒப்படைக்கப்போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வரின் வெளிநாட்டு பயணம் திட்டமிடப்பட்ட ஒன்று. இந்த பயணத்தில் முதலில் லண்டன் செல்லும் எடப்பாடி பழனிசாமி அடுத்து அமெரிக்கா என மொத்தம் 13 நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார். 13 நாட்கள் முதல்வர் வெளிநாடு செல்வதால் அவரது துறைகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என்பது மரபு. அந்த பொறுப்பு துணை முதல்வர் ஓபிஎஸ்சிடம் போகுமா அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அமைச்சர்களான தங்கமணி அல்லது வேலுமணி இருவரில் ஒருவரிடம் கொடுப்பாரா என்பதுதான் அதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தான் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டால் ஓபிஎஸ் ஏதாவது செய்து தனது முதல்வர் பதவிக்கு ஆப்பு வைத்துவிடுவார் என எண்ணி தனது பொறுப்புகளை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாகவும், இந்த பஞ்சாயத்து அமித் ஷாவிடம் சென்றதாகவும் முன்னர் பேசப்பட்டது. அமித் ஷா பொறுப்புகளை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க அறிவுறுத்தியும் எடப்பாடி அதற்கு முடிவு கொடுக்கவில்லையாம்.

எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்புக்களை துணை முதல்வர் ஓபிஎஸ்சிடம் ஒப்படைக்காமல் தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் தங்கமணி அல்லது வேலுமணி ஆகியோரில் ஒருவரிடம் ஒப்படைப்பார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி யாரையும் நம்பாமல் தனது பொறுப்புக்களை யாரிடமும் ஒப்படைக்கப்போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய முடிவுகள் குறித்து வெளிநாட்டில் இருந்தபடியே அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவாராம். மேலும் முக்கிய கோப்புகளுக்கு முதல்வர் எங்கிருக்கிறாரோ அங்கிருந்தே பேக்ஸ் வழியே ஒப்புதல் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version