தமிழ்நாடு

புயலை கிளப்பிய தினகரன் ஓபிஎஸ் சந்திப்பு: எடப்பாடி ரியாக்‌ஷன் என்ன?

Published

on

தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க துணை முதல்வர் ஓபிஎஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசியதாக வெளியான தகவல் தமிழக அரசியலில் குறிப்பாக ஆளும் கட்சி வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

தங்க தமிழ்ச்செல்வன் இந்த சந்திப்பு குறித்தான தகவலை ஊடகம் மூலமாக கசியவிட அதனை டிடிவி தினகரனும் ஆமோதித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. டிடிவி தினகரன் அளித்த செய்தியாளர் சந்திப்பை நேரலையில் எடப்பாடி பழனிச்சாமி பார்த்ததாக கூறப்படுகிறது.

தினகரனின் செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும், ஓபிஎஸுக்கு போன் போட்டாராம் எடப்பாடி. அந்த நேரத்தில் ஓபிஎஸ் லைன் ரொம்ப நேரம் பிஸியாக இருந்திருக்கிறது. நீண்ட முயற்சிக்கு பின்னர் எடப்பாடிக்கு ஓபிஎஸ் லைன் கிடைத்திருக்கிறது. எடப்பாடி இந்த விவகாரம் குறித்து கேட்பதற்கு முன்னதாகவே போனை எடுத்ததும் ஓபிஎஸ் இது தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

நம்மை பிரிக்கவும், என்னை பழிவாங்கவும், திட்டம் போட்டு இப்படி பொய்யான தகவலை தினகரன் பரப்பிட்டு இருக்கார். பிடிக்கலைன்னா நான் விட்டுட்டுப் போய்டுவேன், ஆனால் துரோகம் செய்யுற பழக்கம் எனக்கு இல்லை என்றாராம் ஓபிஎஸ். அதற்கு எடப்பாடி, நான் உங்களை நம்புறேன். ஆனால், நடக்கிறது எல்லாம் கவலை தரக்கூடியதாக இருக்கு. பார்த்துக்கோங்க என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாராம். ஆனால் இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதில் இருந்து எடப்பாடி கொஞ்சம் பயத்திலும் கொஞ்சம் வருத்தத்திலும் இருக்கிறாராம் என அதிமுக வட்டாரத்தில் அரசல் புரசலாக பேசிக்கொள்கிறார்கள்.

Trending

Exit mobile version