தமிழ்நாடு

ஒரே நாளில் வேதா இல்லம், ஜெயலலிதாவின் முழு உருவ சிலையைத் திறந்து வைத்த எடப்பாடியார்; ஜெ., பிறந்தநாள் குறித்தும் முக்கிய அறிவிப்பு

Published

on

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று சென்னை, மெரினா கடற்கரையில் நினைவிடத்தைத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் இன்று ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் தோட்ட வேதா இல்லத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி. இது ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக இருக்கும் என்றும், பொது மக்களின் பார்வைக்கு அந்த இல்லம் திறந்து வைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘சென்னை, போயஸ் தோட்டத்திலுள்ள மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த அரசுடைமையாக்கப்பட்ட “வேதா நிலையம்” நினைவு இல்லத்தை இன்று திறந்து வைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினேன்’ என ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

அதேபோல, சென்னை கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் 9 அடி முழு உருவ ஜெயலலிதாவின் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதியன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பழனிசாமி.

இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஜெயலலிதா சம்பந்தமான பல்வேறு விஷயங்களைத் திறந்து வைத்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

seithichurul

Trending

Exit mobile version