தமிழ்நாடு

தமிழ் நாட்டில் மீண்டும் லாட்டரியா? எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

Published

on

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன என்பதும், புதுப்புது அறிவிப்புகள் தினமும் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்துக்கும் பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிர்ச்சி தரும் செய்தியாக மீண்டும் லாட்டரி சீட்டு தமிழகத்தில் வர இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏழை எளிய மக்களின் பணத்தை சுரண்டும் இந்த லாட்டரி சீட்டை கடந்த அதிமுக ஆட்சியின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடை செய்தார். அதன்பிறகு பல ஆண்டுகளாக தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை இருந்துவரும் நிலையில் தற்போது மீண்டும் லாட்டரி சீட்டு வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ஒரு உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டத்தில் கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும்போது தனியாரை நுழைய அனுமதித்து, லாட்டரி சீட்டு திட்டத்தை சீரழித்தார்.

அப்போதுதான் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் தமிழகத்தில் நுழைந்தது. ஒரு சீட்டின் விலை பத்து ரூபாய் என்றும் பரிசு ஒரு கோடி என்றும் மக்களிடையே பேராசையை தூண்டப்பட்டது. ஒரு ரூபாய்க்கு ஒரு லட்சம், மாதம் ஒரு முறை குலுக்கள் என்ற நிலை மாறி, ஒரு நம்பர் லாட்டரி முதல் பல கோடி வரை பரிசு என்று ஒரு நாளைக்கு குறைந்தது 50 விதமான லாட்டரிகள் தமிழகத்தில் விற்பனை நடைபெற்றது.

லாட்டரி சீட்டு வாங்கி பல அப்பாவிகள் தற்கொலை செய்துகொண்ட அவல நிலை காரணமாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2001 இல் லாட்டரி சீட்டுக்கு தடைவிதித்தார். ஒரே இரவில் லாட்டரி சீட்டை தமிழகத்திலிருந்து ஒழித்த பெருமை அவரையே சாரும்.

இந்த நிலையில் தற்போது தனியார் லாட்டரி ஏஜெண்டுகள் கொள்ளையடிக்கவும், அதன்மூலம் ஆட்சியாளர்கள் பெருத்த லாபம் அடைவதற்கும் மீண்டும் லாட்டரி சீட்டு கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக்கி திமுக அரசு முடிவு செய்துள்ளது. லாட்டரி சீட்டுக்களை மீண்டும் இந்த அரசு கொண்டு வந்தால் தமிழ்நாட்டு மக்களிடையே மிகப் பெரிய எதிர்ப்பை ஸ்டாலின் சந்திக்க நேரிடும். எனவே லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டுவர முயற்சிக்க வேண்டாம் என கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ என எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version