தமிழ்நாடு

ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தடை விதித்தது தேர்தல் ஆணையம்!

Published

on

திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, சட்டமன்றத் தேர்தலையொட்டிப் பிரச்சாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

சில நாட்களுக்கு முன்னர் ராசா, சென்னை, ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசினார். இருவரையும் ஒப்பிடும் போது, அரசியல் ரீதியாக ஸ்டாலின் நிறை மாதத்தில் பிறந்த குழந்தை என்றும், பழனிசாமி குறைப் பிரசவத்தில் பிறந்தவர் என்றும் கூறினார். இந்தக் கருத்து சர்ச்சையானது.

குறிப்பாக அதிமுகவினர், முதல்வர் பழனிசாமியின் தாயாரை கொச்சைப்படுத்தும் வகையில் ராசா பேசியுள்ளார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.

முதல்வர் பழனிசாமியும், பொதுக் கூட்டம் ஒன்றில் தன் தாயைப் பற்றி தவறாக பேசி விட்டார் எனக் கூறி வருந்தினார். இதைத் தொடர்ந்து ராசா, பழனிசாமியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையம், ராசாவின் பேச்சுக்கு விளக்கம் கொடுக்கச் சொல்லி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ராசா, நான் அரசியல் ரீதியிலேயே மக்களுக்குப் புரியும்படி ஒரு கருத்தைத் தெரிவித்தேன். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என விளக்கம் கொடுத்தார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத தேர்தல் ஆணையம், ‘நீங்கள் கூறிய விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. அது அவதூறு செய்யும் வகையில் அமைந்துள்ளது. தாய்மையின் தரத்தைத் தாழ்த்தும்படி அமைந்துள்ளது. இதைப் போன்ற கருத்துகளைச் சொல்வதிலிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். நீங்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என்று உத்தரவிடுகிறோம்’ என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Trending

Exit mobile version