தமிழ்நாடு

கேர் டேக்கர் எதற்கு? துரைமுருகன் கிண்டல்!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்லும்போது அவரது பொறுப்புக்கள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது. கேர் டேக்கர் தேவையில்லை என கூறினார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். இதனை திமுக பொருளாளர் துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று தனது பயணத்தை முதல்வர் தொடங்க உள்ளார். இந்நிலையில் முன்னதாக முதல்வரின் பொறுப்புகள் யாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இதனையடுத்து நேற்று இதற்கு பதில் அளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்றைக்கு தொழில்நுட்பம் பெரிய அளவுக்கு பெருகிவிட்டது. எனவே முதல்வருடைய பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டிய அவசியமே தற்போது இல்லை. ஊடகங்கள்தான் கேர் டேக்கர், கேர் டேக்கர் என்று கூறிவருகின்றன. தமிழ்நாடு மக்களை கேர் டேக் செய்யதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். தமிழக அரசும் உள்ளது என்றார்.

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவரும், திமுக பொருளாளருமான துரைமுருகன், முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமானால் கேர் டேக்கர் தேவைப்படலாம். தமிழக அரசு ஒன்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்போவதில்லை. பிறகு எதற்கு கேர் டேக்கர் எல்லாம் என்றார் கிண்டலாக.

seithichurul

Trending

Exit mobile version