தமிழ்நாடு

முதல்வர் இவ்வளவு விவரமற்றவராக இருப்பார் என நினைக்கவில்லை: துரைமுருகன் அட்டகாசம்!

Published

on

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வேலூர் தொகுதி திமுக வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மேலும் அவருக்கு தொடர்புடையவர்கள் இடங்களிலும் சோதனை நடைபெற்று பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர் இதனை காரணம் காட்டி அந்த தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி சூலூரில் பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேலூரில் திமுக சார்பாக நிறுத்தப்பட்ட துரைமுருகனின் மகனின் வீடு மற்றும் அவருக்கு வேண்டியவர்களின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது மூக்குத்தி, கால் பவுன், அரை பவுன் என 12 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். 13 கோடி ரூபாய் பணத்தை ரொக்கமாக எடுத்தார்கள். அனைத்தும் புது 200 ரூபாய் நோட்டுக்கள். கிடைத்தது 13 கோடி, கிடைக்காதது எத்தனை கோடி என்று தெரியவில்லை. 8 வருடம் ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு கொள்ளையடித்திருக்கிறார்கள் என்றால், ஆட்சியில் இருந்திருந்தால் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார். அதில், இதுதொடர்பாக வந்த செய்தியை பார்த்தபோது எடப்பாடி பழனிசாமியை பார்த்து பரிதாபப்படுவதா, சிரிப்பதா அல்லது ஆத்திரப்படுவதா என்று தெரியவில்லை. முதலமைச்சர் இவ்வளவு விவரம் அற்றவராக இருப்பார் என்று நினைக்கவில்லை. அவர் கூறியது அனைத்தும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

எங்களது வீடு, கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டபோது, அவர்கள் எடுத்துச் சென்றது 10 லட்சம் ரூபாய் மட்டுமே. முதல்வரின் கூற்றுப்படி 13 கோடி ரூபாய் அல்ல. ரூ.13 கோடி எடுத்த இடமும் எங்களுக்கு உரியது அல்ல. 12 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் எடப்பாடி கூறுகிறார். ஆனால் சோதனையில் எங்கும் தங்கம் கைப்பற்றப்படவில்லை. இதுதான் உண்மை. வருமான வரித்துறை கொடுத்துள்ள பஞ்சன்நாமாவைப் பார்த்தாலே இது தெரியும்.

எல்லாவற்றையும் அறிந்துகொள்ளக் கூடிய இடத்தில் அமர்ந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதுவும் தெரியாத சராசரி மனிதரைப் போல பேசியிருப்பது கேலிக்குரியதாகும். எங்களுக்கு சொந்தமான இடங்களில் 12 கிலோ தங்கமும், 13 கோடி ரூபாய் பணத்தையும் வருமான வரித்துறை கைப்பற்றியதாக முதல்வர் நிரூபித்தால், நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இல்லாவிட்டால் எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா என சவால் விடுத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version