விமர்சனம்

அடிப்பொலி இரண்டாம் பாதிக்காக சுமாரான முதல் பாதியை பொறுத்துக்கொள்ளலாம் – த்ரிஷ்யம் – 2 விமர்சனம்

Published

on

எதிர்பாராத விதமாக தன் மகள் செய்யும் கொலைக் குற்றத்தில் இருந்து தன் குடும்பத்தை தப்பிக்க வைத்து விட்டு சொந்தமாக தியேட்டர் வாங்கி நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் ஜார்ஜ்குட்டி (மோகன்லால்). அந்தக் கொலை வழக்கு முடிந்து ஆறு ஆண்டுகள் (ஆம், இந்தக் கதை 6 ஆண்டுகள் கழித்து நடக்கிறாது) ஆனால், போலீஸ் அந்த வழக்கு தொடர்பான விசாரணையிலேயே இருக்கிறது.

ஊரில் அந்தக் கொலையை ஜார்ஜ்குட்டி குடும்பத்தினர் தான் செய்தனர் என ஆங்காங்கே பேசிக்கொண்டே வருகிறார்கள். யாருமே பார்க்கமால் முடிந்துவிட்ட கொலை தொடர்பாக திடீரென ஒரு துப்பு கிடைக்கிறது போலீசாருக்கு… அந்த துப்பு மூலம் மீண்டும் வருண் கொலை வழக்கை தோண்டி ஆமாம் உண்மையில் தோண்டி ஜார்ஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்கிறார்கள் போலீஸ்காரர்கள்… மீண்டும் அந்தக் கொலை வழக்கில் இருந்து தன் குடும்பத்தை காப்பாறினாரா ஜார்ஜ்குட்டி என்பதை சொல்லும் படம்தான் த்ரிஷ்யம் – 2…

பார்ட் – 2 என்றாலே சூர மொக்கைதான் என்ற வழக்கத்தை அடித்து நொருக்கியிருக்கிறது இந்தப் படம். அட்டகாசமான ட்விஸ்டுகளுடன் திரைக்கதையை அமைத்திருக்கிறார் ஜீத்து ஜோசப். எந்த ட்விஸ்டையும் பார்வையாளனால் கண்டுபிடிக்க முடியாமல் எழுதி மாயாஜாலம் செய்திருக்கிறார் இயக்குநர்… ஜார்ஜும் அவர்களது குடும்பமும் செய்தது கொலை. அதை மறைப்பது அதைவிட பெரிய குற்றம். சுயநலவாதிகள் என பல வகையில் அவர்களை வெறுக்க வாய்ப்பி இருந்தாலும் அந்தக் குடும்பம் தப்பித்துவிட வேண்டும். மீனா எங்கையுமே உளறிவிடக் கூடாது… அந்த இரண்டு பெண் குழந்தைகளும் பாவம்… என்று பரிதாபம் ஏற்படும் அளவிற்கு அட்டகாசமாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எழுதியுள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் குடும்பம். தன் குடும்பத்தை காப்பாற்ற எந்த அளவுக்கும் இறங்கும் ஜார்ஜாக மோகன்லால் கதாபாத்திரம். உண்மையில் இந்தக் கதைக்கு இவரை விட்டால் வேறு மனிதனே இல்லை எனும் அளவுக்கு அப்பாவியாக நடித்திருக்கிறார் மோகன்லால். ஒரு குருட்டு தைரியம்… அதே நேரத்தில் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பதைபதைப்பு… இவற்றிற்கு இடையே பதற்றம் இல்லாமல் ஒரு உடல் மொழியை வெளிப்படுத்த வேண்டும். அதை அப்படியே செய்திருக்கிறார் மோகன் லால்… அன்னைக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி என மீண்டும் இழுக்கும் போது அப்ளாஸ் அள்ளுகிறார்… லால் ஏட்டன் லால் ஏட்டம் தான்… பாவம் கமல் இரண்டாம் பாகம் எடுத்தால் இந்த அளவுக்கு நடிக்க வேண்டுமே…

ஒரு குற்றம் செய்துவிட்டோம்… அந்தக் குற்றத்தையும் மறைத்துவிட்டோம்… ஆனால், அதே தவிப்பில் இருக்கும் குழந்தைகளுடன் இருக்கும் தாய்க்குத்தான் அவர்கள் படும் வழியும் வேதனையும் புரியும். எங்கு சென்றாலும் யார் பார்த்தாலும் நம்மைத்தான் சொல்கிறார்களோ… அதற்காகத்தான் பார்க்கிறார்களோ என்று குறுகிப் போகும் இயல்பான குடும்பத் தலைவியாக மீனா அசத்தியிருக்கிறார்… அவரது கண் இப்போதும் நடிக்கிறது… 80’ஸ் கிட்ஸின் கனவுக் கன்னி இல்லையா…

மோகன்லாலின் மூத்தமகள் அன்ஸிபா, எஸ்தர் அனில் தவிர இந்தப் படத்தில் முரளி கோபி, அஞ்சலி நாயர் உள்ளிட்டோரும் புதிதாக நடித்துள்ளனர். அவர்கள் அளவில் இந்த திரைக்கதைக்கு ஏற்ற நடிப்பையே கொடுத்திருக்கிறார்கள்.
பெரிய அளவில் ஒளிப்பதிவுக்கு வேலை இல்லாத படம் தான் என்றாலும் மோகன்லாலின் ஊரை அட்டகாசமாக படம் பிடித்து காட்டுகிறார் சதீஸ் குரூப். த்ரில்லர் கதையை மேலும் சுவாரஸ்யம் ஆக்குவது அனில் ஜோசப்பின் பின்னணி இசைதான். இடையில் ஒரு தேவையில்லாத பாடல் என்றாலும் பின்னணி இசையில் விருவிருப்பை கூட்டத்தவறவில்லை…

கொஞ்சம் டீட்டெய்லாக நகரும் முதல் பாதி அதாவது ஒரு மணி நேரத்தைப் பொறுத்துக்கொண்டால் பிற்பாதியில் வரும் ஒன்றரை மணி நேரமும் அடிப்பொலி ட்விஸ்டுகளுடன் நம்மை ஆச்சர்யப்படுத்தும் இந்த த்ரிஷ்யம் – 2… நிச்சயம் தமிழில் எடுப்பார்கள் என்றாலும் ஒரு நல்ல சினிமா அனுபவத்திற்காக கட்டாயம் த்ரிஷ் – 2-வை அமேசான் ப்ரைமில் பார்த்துவிடலாம்.

Trending

Exit mobile version