தமிழ்நாடு

நான் எழுதியுள்ள நூல்களை யாரும் வாங்க வேண்டாம்: தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் வேண்டுகோள்

Published

on

நான் தலைமைச் செயலாளர் பதவியில் இருக்கும் வரை நான் எழுதிய நூலை யாரும் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் எனக்கே என்னுடைய நூல்களை பரிசு அளிக்க கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

நான்‌ பணி நேரம்‌ முடிந்த பின்பும்‌, விடுமுறை நாட்களிலும்‌ எனக்குத்‌ தெரிந்த தகவல்களை வைத்தும்‌, என்‌ அனுபவங்களைத்‌ தொடுத்தும்‌ சில நூல்களை எழுதி வந்தேன்‌. அவற்றில்‌ உள்ள பொருண்மை, கடற்கரையில்‌ கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக்‌ கருதி சேகரிக்கும்‌ சிறுவனின்‌ உற்சாகத்துடன்‌ எழுதப்பட்டவை. இப்போதுள்ள பொறுப்பின்‌ காரணமாக பள்ளிக்‌ கல்வித்துறைக்கு நான்‌ ஒரு மடல்‌ எழுதியுள்ளேன்‌. நான்‌ எழுதியுள்ள நூல்களை எக்காரணம்‌ கொண்டும்‌ எந்த அழுத்தம்‌ வரப்பெற்றாலும்‌, தலைமைச்‌ செயலராகப்‌ பணியாற்றும்‌ வரை எந்தத்‌ திட்டத்தின்‌ கீழும்‌ வாங்கக்‌ கூடாது என்கிற உத்தரவே அது. பார்ப்பவர்களுக்கு என்‌ பணியின்‌ காரணமாக அது. திணிக்கப்பட்டிருப்பதாகத்‌ தோன்றி களங்கம்‌ விளைவிக்கும்‌ என்பதால்தான்‌ இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன்‌. எந்த வகையிலும்‌, என்‌ பெயரோ, பதவியோ தவறாகப்‌ பயன்படுத்தப்படக்‌ கூடாது என்பதே நோக்கம்‌.

அரசு விழாக்களில்‌ பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள்‌ வழங்கினால்‌ நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம்‌ ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது. அரசு விழாக்களில்‌ அரசு அலுவலர்கள்‌ யாரும்‌ என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில்‌ விநியோகிக்க வேண்டாம்‌ என்று அன்புடன்‌ விண்ணப்பம்‌ வைக்கிறேன்‌. இவ்வேண்டுகோள்‌ மீறப்பட்டால்‌ அரசு செலவாக இருந்தால்‌ தொடர்புடைய அதிகாரியிடம்‌ அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில்‌ செலுத்தப்படும்‌. சொந்த செலவு செய்வதையும்‌ தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம்‌ கொண்டும்‌ ஏற்படுத்த வேண்டாம்‌ என அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

இவ்வாறு இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version