தமிழ்நாடு

இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்: திமுக அதிரடி அறிவிப்பு!

Published

on

திமுக தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார். இந்த பதவியை மு.க.ஸ்டாலின் தொடக்க காலத்தில் பல ஆண்டுகளாக வகித்து வந்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று திமுகவிலும் ஸ்டாலின் குடும்பத்திலும் குரல்கள் வலுவாக ஒலித்து வந்தது. இதனால் திமுகவில் அடுத்த வாரிசுக்கான அரியாசனம் கிடைத்துவிட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் திமுகவுக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து திமுகவில் உதயநிதிக்கு பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை சமீப காலமாக எழுந்து வந்தது.

மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் தனது மகன் உதயநிதிக்கு பதவி வழங்க ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்து வருந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதனையடுத்து உதயநிதிக்கு ஸ்டாலின் முன்னதாக வகித்த இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவு நிர்வாகிகளும் வலியுறுத்தி வந்தனர்.

நாமக்கல் மேற்கு, நாமக்கல் கிழக்கு, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் திமுகவினர் உதயநிதிக்கு பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் மாலைக்குள் உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி அளிப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படக் கூடும் என்று திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தற்போது அறிவித்துள்ளார். திமுக இளைஞர் அணிச் செயலாளராக பணியாற்றி வரும் திமுக மு.பெ.சாமிநாதனை, அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக, கழக சட்டதிட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி, இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சி தலைவர்களான முத்தரசன், வைகோ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அறிவிப்பை திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version