தமிழ்நாடு

சில கலைந்தெடுத்த அரசியல் கழிசடைகள்: துரைமுருகன் ஆவேசம்!

Published

on

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நள்ளிரவும் இன்று அதிகாலையும் அதிரடி சோதனை நடத்தினர். தேர்தல் நேரத்தில் இந்த சோதனை நடைபெறுவதால் அரசியல் வட்டாரமும் பரபரப்பாகியிருக்கிறது.

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு சொந்தமாக பொறியியல் கல்லூரி ஒன்றும், சிபிஎஸ்சி பள்ளி ஒன்றும் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் காட்பாடி காந்தி நகரில் இருக்கும் துரைமுருகனின் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் சென்று சோதனை செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை என மீண்டும் துரைமுருகன் வீட்டுக்கு வந்த அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். துரைமுருகன் தீவிர ஆதரவாளர் தேவராஜ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டது என்ன என்பது பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

இந்த சோதனை குறித்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், வீட்டிற்கு வந்த அதிகாரிகள் முதலில் வருமான வரித்துறையினர் என கூறினர். பின்னர் தேர்தல் பறக்கும் படை என கூறினர். இப்படி மாறி மாறி அதிகாரிகள் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் சோதனையிடக்கூடாது என சட்டம் இருக்கிறது என கூறிய பிறகு விடியற்காலை 3 மணிக்கு ஒரு ஆர்டெரை வாங்கிக்கொண்டு வந்து காண்பித்து சோதனையிட்டுவிட்டு போயிருக்கிறார்கள்.

போன மாதம் இந்த சோதனை நடந்திருக்கலாம் இப்போது நடக்க என்ன காரணம். வேலூர் நாடாளுமன்ற வேட்பாளராக கதிர் ஆனந்த் நிற்கிறார். அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது அதனால் களத்தில் எங்களை எதிர்கொள்ள முடியதாக மத்திய, மாநில அரசின் துணையில் இருக்கும் சில கலைந்தெடுத்த அரசியல் கழிசடைகள் அதனை தடுத்து நிறுத்த வேண்டும், எங்களுக்கு மனஉளைச்சல் தரவேண்டும் என செய்த சூழ்ச்சி இது. அரசியலில் நாங்கள் கரைகண்டவர்கள் இதற்கெல்லாம் பயப்படமாட்டோம் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version