தமிழ்நாடு

டி.கே.எஸ்.இளங்கோவன் செய்த குழப்பம்: அதிரடியாக நீக்கிய திமுக தலைமை!

Published

on

திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் பொறுப்பிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

திமுகவின் முக்கிய பேச்சாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்து வந்தவர் டி.கே.எஸ்.இளங்கோவன். இவரை ஏன் திடீரென அந்த பொறுப்பில் இருந்து திமுக நீக்கியது என விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. திமுகவினர் யாரும் மு.க.அழகிரி குறித்து பேசக்கூடாது என தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதை மீறி மதுரையில் நடந்த கூட்டத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன் அழகிரி குறித்து பேசினார். இது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு குறித்து டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த தன்னிச்சையான பேட்டியும் அவரது நீக்கத்திற்கு முக்கிய காரணமாக பேசப்படுகிறது. கலைஞர் கருணாநிதி சிலையை சோனியாகாந்தி திறந்து வைக்க உள்ளதாக செய்திகள் பரவியது. இது திமுக, காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் அமைந்துவிடும். இதற்கு காரணம் அவரது பேட்டிதான்.

நவம்பர் 15-ஆம் தேதிவாக்கில் சிலை திறப்பு நடைபெறலாம், சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள உள்ள தேசிய தலைவர்கள் யார் யார் என்ற பட்டியலையும் கூறியுள்ளார் அந்த பேட்டியில். இந்த பேட்டியளித்த சில மணி நேரங்களில் அவர் நீக்கப்படுவதாக அறிவாலயத்தில் இருந்து அறிவிப்பு வெளியானது.

கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு முக்கியமான ஒன்று. அதனை திமுக தலைவர் ஸ்டாலின் தான் முறைப்படி அறிவிக்க வேண்டும். ஆனால், அதற்கு முன்னரே யார் யாருக்கு அழைப்பு கொடுத்திருக்கிறோம், என்ன தேதியில் நடக்கும் என்று முன் கூட்டியே அறிவித்துவிட்டார் இளங்கோவன். இது தான் அவரது நீக்கத்துக்கு காரணம் என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Trending

Exit mobile version