தமிழ்நாடு

பாஜகவில் இணைந்த திமுக எம்.எல்.ஏ-  மதுரை வடக்குத் தொகுதியில் போட்டி!

Published

on

திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் சரவணன் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். அப்படி இணைந்த அவருக்கு பாஜக, மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது.

எதிர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே மாதம் 2 ஆம் தேதி, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், தன் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக, 173 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. கூட்டணிக் கட்சிகள் பல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 187 தொகுதிகளில் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலைச் சந்திக்க திமுக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன.

திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ், கடந்த 2019 ஆம் ஆண்டு மறைந்ததைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சரவணன். இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட சரவணனுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், சரவணன் செயல்பாடுகள் மீது தலைமைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால், அந்த தொகுதியைக் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கியது திமுக.

இதனால் சரவணன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து அவர், இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இப்படி இணைந்த அவருக்கு மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்துள்ளது.

 

Trending

Exit mobile version