தமிழ்நாடு

கேட்டது 54, தருவதோ 12: திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை!

Published

on

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நேற்று தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடந்த நிலையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் கூட்டம் முடிவடைந்ததாகவும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

நேற்று அண்ணா அறிவாலயம் சென்ற காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குண்டு ராவ் மற்றும் உம்மன் சாண்டி உள்பட காங்கிரஸ் பிரமுகர்கள் திமுக தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். துரைமுருகன், டிஆர் பாலு, கனிமொழி, கே.என்.நேரு உள்பட திமுக தலைவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் 54 சட்டசபை தொகுதிகளை காங்கிரஸ் கேட்டதாக தெரிகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை அடுத்து அதன் அடிப்படையில் சட்டமன்ற தேர்தலில் 54 தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் திமுகவோ இந்த முறை 200 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்டு இருப்பதால் மீதி உள்ள 34 தொகுதிகளை மட்டுமே கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் என்றும், அதில் காங்கிரசுக்கு அதிகபட்சமாக 12 தொகுதிகளை ஒதுக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியுடன் ஆலோசித்துவிட்டு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை பேசலாம் என்று கூறிவிட்டு திரும்பி விட்டதாக தெரிகிறது. பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால் மேலிட தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மட்டும் ‘அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்’ என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, தான் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்காவிட்டால் மாற்றுவழி ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version