தமிழ்நாடு

தேமுதிக, அமமுக கூட்டணி வாய்ப்பு: பிரேமலதாவின் சரவெடிக்கு பின்னணியில் டிடிவி தினகரன்?

Published

on

தேமுதிக மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் ஒரே நேரத்தில் நடத்தியது திமுக பொருளாளர் துரைமுருகன் மூலம் அம்பலமானது. இது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி தேமுதிகவுக்கு மிகப்பெரும் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு உரிய முக்கியத்துவமும், உரிய தொகுதி எண்ணிக்கையும் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. தேமுதிக வேறு வழியில்லாமல் அதிமுக கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொண்டு போக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது பிரேமலதா சரவெடி போல வெடித்து தள்ளிவிட்டார். திமுக, திமுக தலைவர்கள், செய்தியாளர்கள் என யாரையும் விட்டிவைக்காமல் ஒருமையில் பேசி சரவெடியாய் வெடித்து சிதறினார். மேலும் இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் ஆளும் அதிமுகவை ஒரு பிடி பிடித்தார் பிரேமலதா. அதிமுகவை அகில இந்திய தில்லு முல்லு கட்சி என நான் விமர்சித்திருந்தேன். அந்த கருத்தில் இருந்தும் மாறுபடவில்லை. அதிமுகவின் 37 எம்பிக்கள் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என அதிமுகவையும் பிரேமலதா விஜயகாந்த் விட்டுவைக்கவில்லை.

பிரேமலதா அதிமுகவை விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மீது பிரேமலதாவின் பாய்ச்சலுக்கு காரணம் டிடிவி தினகரன் கொடுத்த தைரியம் தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். தேமுதிகவின் இந்த கூட்டணி களேபரங்களுக்கு பின்னர் சுதீஷ் அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது தேமுதிக, அமமுகவுடன் கூட்டணிக்கு வர தயாராக இருப்பதாக சுதீஷ் கூறியுள்ளார். இந்த தகவல் டிடிவி தினகரனுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அவரும் சரி வரட்டும், பேசுவோம் என பதில் கூறியிருக்கிறார். தினகரன் கொடுத்த இந்த நம்பிக்கை வார்த்தைக்கு பின்னரே பிரேமலதா திமுக, அதிமுகவுக்கு எதிராக செய்தியாளர் சந்திப்பில் விளாசித்தள்ளியிருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Trending

Exit mobile version