தமிழ்நாடு

கொடைக்கானலுக்கு போகப்போகிறீர்களா? திண்டுக்கல் கலெக்டர் சொன்னதை கொஞ்சம் பாத்துட்டு போங்க!

Published

on

கொடைக்கானலுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் அவர்கள் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது

கேரளா மற்றும்‌ வெளி மாநிலங்களிலிருந்து வரக்கூடிய நபர்கள்‌ 72 மணி நேரத்திற்குள்‌ கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து நோய்‌ தொற்று இல்லை என்பதற்கான மருத்துவ சான்று அல்லது இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக்‌ கொண்ட விபரத்தினை சோதனைச்‌ சாவடிகளில்‌ சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படுவர்‌.

கொடைக்கானல்‌ வட்டத்தில்‌ உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான பிரையண்ட்‌ பூங்கா, செட்டியார்‌ பூங்கா, ரோஸ்‌ கார்டன்‌, கோக்கர்ஸ்‌ வாக்‌, குணா குகை, தூன்‌ பாறை, பைன்‌ மரக்காடுகள்‌ அனைத்தும்‌ கொரோனா நோய்‌ தடுப்பு செய்யும்‌ காரணத்திற்காக மூடப்பட்ட நிலையில்‌ உள்ளது. தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும்‌ மக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களான கூக்கால்‌ நீர்வீழ்ச்சி, ஐந்து வீடு நீர்‌ வீழ்ச்சி (பேத்துப்பாறை), வட்டக்கானல்‌ நீர்வீழ்ச்சி, பசுமை பள்ளத்தாக்கு மற்றும்‌ டால்பின்‌ முனை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள்‌ செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே தேவையற்ற பயணங்களைத்‌ தவிர்க்கவும்‌ அறிவுறுத்தப்படுகிறது.

கொடைக்கானல்‌ வட்டத்தில்‌ உள்ள பட்டா இடங்களிலோ, அரசு புறம்புகல்‌ இடங்களிலோ தற்காலிகமாக கூடாரம்‌ அமைத்து தங்குவோர்‌ மீதும்‌, தங்குவதற்கு ஏற்பாடு செய்தவர்கள்‌ மீதும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என தெரிவிக்கப்படுகிறது.‌ எந்த ஒரு நிறுவனத்திலோ, கடையிலோ, இடத்திலோ கொரோனா விதிகளைப்‌ பின்பற்றாத சூழ்நிலை அறியப்பட்டால்‌, உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கையை உள்ளாட்சி அமைப்புகள்‌, வருவாய்த்துறை மற்றும்‌ காவல்துறை மேற்கொள்ளும்‌ எனதெரிவிக்கப்படுகிறது.

மலைப்‌ பகுதிகளில்‌ அனுமதிக்கப்பட்ட, வேகத்தை விட அதிவேகமாக இருசக்கரம்‌ மற்றும்‌ நான்கு சக்கர வாகனங்களில்‌ வருபவர்கள்‌ மீதும்‌, மது அருந்தி வாகனம்‌ ஒட்டுபவர்கள்‌ மீதும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌. எனவே, பொதுமக்கள்‌ நலன்‌ கருதி அரசால்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்‌

இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.ச.விசாகன்‌, அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

Trending

Exit mobile version