தமிழ்நாடு

ஈபிஎஸ் நான்கு கால் பிராணியாகத் தவழ்ந்து வந்து சசிகலாவின் காலில் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன? தினகரன் காட்டம்!

Published

on

நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அங்கு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அந்த தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி நிலவுகிறது. நான்கு தொகுதிகளிலும் மூன்று கட்சிகளுக்கும் சமமான வெற்றி வாய்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் சூலூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் கடுமையாக விமர்சித்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், கொங்கு மண்டலம் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் என்றென்றும் ஆதரவாக இருந்த பகுதி. அதனால்தான் தான் முதல்வராகத் தொடரமுடியாத நிலையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சென்றார் சசிகலா. அவர் நினைத்திருந்தால் அவரது அக்கா மகனாகிய என்னைக்கூட முதல்வராக்கி இருக்கலாம். ஆனால், நாங்கள் பதவிக்காக அலைபவர்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். எத்தனையோ பேரை உருவாக்கியவர்கள் நாங்கள்.

ஜெயலலிதா கூட பழனிசாமியை அமைச்சராகத்தான் ஆக்கினார். ஆனால், சசிகலாவோ முதல்வராக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். பழனிசாமி முதல்வராகப் பதவியேற்ற பின்னர் நான், செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சிறைக்கு சசிகலாவைச் சந்திக்க கிளம்பினோம். அப்போது எங்களிடம் பேசிய பழனிசாமி, பாஜக என்னைக் குறிவைத்திருக்கிறது. என் மீது வழக்கு வரலாம். எனவே அவரை சந்திக்க வரவில்லை, அடுத்தமுறை வருகிறேன் என்றார். அதன்பிறகு நடந்தவை உங்களுக்கே தெரியும்.

பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக பழனிசாமி செய்ததற்குப் பெயர் ராஜதந்திரமா? சந்தர்ப்பவாதம்தான் ராஜதந்திரம் என்றால் அதை நீங்கள் அனுமதிப்பீர்களா? அன்றைக்கு நான்கு கால் பிராணியாகத் தவழ்ந்து வந்து சசிகலாவின் காலில் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன? சுயம்பாக முதல்வராக வந்தால் காலில் விழக் காரணம் என்ன? என மிகவும் காட்டமாக பழனிசாமியை குறிவைத்து பிரச்சாரம் செய்தார் தினகரன்.

seithichurul

Trending

Exit mobile version