தமிழ்நாடு

தங்க தமிழ்செல்வனை இதனால் தான் நீக்கவில்லை: தினகரன் விளக்கம்!

Published

on

அமமுக முக்கிய தலைவராகவும், அந்த கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் இருக்கும் தங்க தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில். அவரை ஏன் இதுவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை என்பதற்கு தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

அமமுக பிரமுகர் ஒருவருடன் தங்க தமிழ்ச்செல்வன் பேசிய போன் உரையாடல் ஒன்று தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஆடியோ குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விளக்கம் அளித்த தங்க தமிழ்ச்செல்வன், நான் தவறு செய்திருந்தால் என்னை கட்சியை விட்டு நீக்க வேண்டியது தானே. ஏன் இந்த மாதிரி சின்னத்தனமான செயல்பாட்டை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னை பிடிக்காவிட்டால் கட்சியை விட்டு நீக்குங்கள்.

நான் நேர்மையானவன் ஒரு தகவலை சொல்கிறேன் அது பிடிக்கவில்லை என்றால் என்னை கட்சியை விட்டு நீக்கி விடுங்கள். சிலரை கூட்டமாக வைத்துக் கொண்டு வலைதளங்களில் என்னை பற்றி தவறான செய்தியைப் போடுவது எனக்கு வருத்தமாக உள்ளது. இதுக்கு மேல் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

இந்நிலையில் சென்னையில் இன்று தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தங்க தமிழ்ச்செல்வன் மதுரையைச் சேர்ந்த நிர்வாகி செல்லப்பாண்டியன் என்பவருடன்தான் பேசியிருக்கிறார். அதுதொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அவர் கட்சிக்கு எதிராக தொடர்ந்து ஊடகங்களில் பேசிவருகிறார். ஆகவே அவர் ஏதோ முடிவெடுத்துவிட்டார். எனவே அடுத்த தேனி மாவட்டச் செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளராக யாரை நியமிக்கலாம் என்று ஏற்கனவே ஆலோசனை நடத்தியிருந்தோம். அதனால்தான் அவரை நீக்கவில்லையே தவிர தயக்கமோ அல்லது பயமோ கிடையாது என்றார்.

இனிமேல் தங்க தமிழ்ச்செல்வனிடம் விளக்கம் கேட்கத் தேவையில்லை. அவர் விஸ்வரூபம் எல்லாம் எடுக்கமாட்டார். என்னைப் பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார். அவருடைய பதவிக்கு வேறு ஆள் நியமிக்கப்பட்டாலே அவர் நீக்கப்பட்டதாகத்தானே அர்த்தம். யாருடைய அறிவுரையின்படியோதான் அவர் இவ்வாறு பேசிவருகிறார். அவர் என்ன முடிவெடுத்துள்ளார் என்பது இன்னும் சில நாட்களில் உங்களுக்கே தெரியும் என்றார் தினகரன்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version