தமிழ்நாடு

இரட்டை தலைமையின் இரட்டை நிலைப்பாடு: அதிமுகவை விமர்சிக்கும் தினகரன்!

Published

on

முத்தலாக் சட்டத்துக்கு அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆதரவாக பேசியும், ஆதரவாக வாக்களித்ததும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கையிலெடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையை விமர்சித்துள்ளார்.

கடந்த மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் சட்டத்தை அதிமுக கடுமையாக எதிர்த்தது. ஆனால் தற்போது இதனை மீண்டும் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. இதில் மக்களவையில் பேசிய அதிமுகவின் ஒரே எம்பி ரவீந்திரநாத் குமார் யாரும் எதிர்பார்க்காத விதமாக முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவாக பேசி அதற்கு புகழாரம் சூட்டினார். மேலும் இந்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இது தமிழக ஊடகங்களில் முக்கிய செய்தியாக பரவியது. இந்த விவகாரத்தை தற்போது அரசியல் கட்சிகள் கையிலெடுத்துள்ளன. திமுக வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் இதனை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. அதிமுக இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் அதிமுகவின் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி நிலைமையை சமாளித்து வருகிறார்.

இதனையடுத்து இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்தலாக் மசோதாவை மக்களவையில் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் ஆதரித்தார். ஆனால் தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக சார்பில் கலந்துகொள்பவர்கள், மாநிலங்களவையில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்று கூறுகிறார்கள்.

இரண்டு அவைகளிலும் வெவ்வேறு நிலைப்பாடு எடுப்பது சரியாக இருக்குமா? அப்படியென்றால் கட்சியே முரண்பாடாக இருப்பதாகத்தான் அர்த்தம். அதிமுக அரசின் இரட்டை நிலைப்பாட்டை சிறுபான்மையின மக்கள் புரிந்துகொள்வார்கள். இரட்டை தலைமையின் கீழ் சிறப்பாக செயல்படுவதாகக் கூறுகிறார்கள். அதற்கு ஒரு உதாரணம்தான் முத்தலாக் விவகாரத்தில் இந்த இரட்டை நிலைப்பாடு என விமர்சித்தார் தினகரன்.

seithichurul

Trending

Exit mobile version