தமிழ்நாடு

எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினுக்கான வெற்றி இது; மீண்டும் வாக்குச் சீட்டு வேண்டும்: தினகரன் அதிரடி!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த கட்சி எதிர்பார்த்த வாக்குகளை வாங்கவில்லை. இந்நிலையில் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் தில்லு முல்லு நடந்ததாக பல்வேறு ஆதாரங்களை முன்வைத்துள்ளார் தினகரன்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்து தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் தினகரன். அப்போது, 1989 முதல் 2016 வரை பல தேர்தல்களை அம்மாவுடன் சந்தித்தவர் சின்னம்மா. அவரை சந்தித்து தேர்தல் முடிவுகள் பற்றி பேசினோம். அமமுகவுக்காக விழுந்த வாக்குகள் காணாமல் போனதை பல்வேறு இடங்களில் நடந்தவற்றை எல்லாம் அவரிடம் எடுத்துச் சொன்னேன் என்றார்.

மேலும் தேனி தொகுதியில் அதிமுக வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடுக்கப் போவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். நாங்களும் ஆதாரங்களை சேகரித்து அந்த வழக்கை வலுவான வழக்காக மாற்றுவோம் என்றார். தொடர்ந்து வாக்குச்சீடு முறைபற்றி தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தினகரன், என்னதான் எலக்ட்ரானிக் மெஷின் என்றாலும் டிஜிட்டல் முறையில் அவற்றில் முறைகேடுகள் நடக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. தேர்தலுக்கு முன்பே இதை சந்திரபாபு நாயுடு எழுப்பினார். இன்றும் வளர்ந்த நாடுகளில் கூட வாக்குச் சீட்டு முறைதான் நடைமுறையில் இருக்கிறது. எனவே இனியாவது நாம் வாக்குச் சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும்.

இப்போது எங்கள் வாக்குகள் எங்கே என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. அதற்கான தெளிவான ஆதாரங்களை சேகரிப்போம். எப்போதுமே தவறு செய்பவர்கள் 100 சதவிகிதம் தடயத்தை அழிக்க முடியாது. எனவே தெளிவான ஆதாரங்களை சேகரித்துக் கொண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமே வேண்டாம், மீண்டும் வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். இதுபற்றி பல கட்சிகளுடனும் பேசுவோம். என்னைப் பொறுத்தவரை இப்போது கிடைத்திருப்பது எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினுக்கான வெற்றி என்றார் அதிரடியாக.

seithichurul

Trending

Exit mobile version