இந்தியா

பாஜக எம்எல்ஏக்கு எதிராக இளம்பெண் எழுதிய கடிதம் ஏன் எனது பார்வைக்கு வரவில்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி!

Published

on

உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த 17 வயது சிறுமிக்கும் அவரது குடும்பத்துக்கும் எம்எல்ஏ தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக தலைமை நீதிபதிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அந்த கடிதம் அவரது பார்வைக்கு வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீது கடந்த ஆண்டு உன்னோவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் அந்த எம்எல்ஏ அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆனால் இளம்பெண்ணின் தந்தை காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்தார். இதற்கு சாட்சியாக இருந்த நபரும் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தாய், அத்தை மற்றும் வழக்கறிஞருடன் அந்த பெண் காரில் சென்றுகொண்டிருந்த போது லாரி ஒன்று மோதியுள்ளது. அதில் அந்த பெண்ணின் தாய் மற்றும் அத்தை உயிரிழந்துள்ளனர். வழக்கறிஞரும், அந்த பெண்ணும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை ஜூலை 12-ஆம் தேதி எழுதியுள்ளார். அதில் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் கொலை முயற்சி நடத்த வாய்ப்பு இருக்கிறது. எம்எல்ஏ எங்களை மிரட்டி வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தற்போது வரை இந்த கடிதம் தலைமை நீதிபதியின் பார்வைக்குச் சென்று சேரவில்லை. இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் எழுதிய கடிதம் ஏன் என் பார்வைக்கு வரவில்லை? எனக் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இதுதொடர்பாக ஒருவாரத்திற்குள் விரிவான பதிலளிக்க உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version