தமிழ்நாடு

நானும் ஸ்டாலினும் ஒரே ஹோட்டலில் தான் தங்கியிருந்தோம்: தினகரன் பரபரப்பு பேட்டி!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த செய்தியில், தேவர் குருபூஜையில் கலந்துகொள்ள வந்த மு.க. ஸ்டாலினும், டிடிவி தினகரனும் ஒரே நேரத்தில் மதுரையிலுள்ள பப்பீஸ் ஹோட்டலில் தங்கியதாகவும், அங்கு இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும். இந்த சந்திப்புக்குப் பிறகுதான் 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை என்று தினகரன் தெரிவித்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இந்நிலையில் தனியார் செய்தித் தொலைக்காட்சி இது தொடர்பாக விவாதமும் நடத்தியது. இதனையடுத்து இந்த சர்ச்சை குறித்து டிடிவி தினகரன் தனது விளக்கத்தை அளித்துள்ளார். அதில், கடந்த ஒன்றரை ஆண்டாக மதுரை சென்றால் பப்பீஸ் ஹோட்டலில்தான் தங்குவேன்.

கடந்த மாதம் 27-ம் தேதியிலிருந்து அங்குதான் தங்கியிருந்தேன். நாங்கள் சந்தித்தோமா என்பது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கூட ஆய்வு செய்துகொள்ளுங்கள். அவர்கள் கூறும் நாளில் நிகழ்வுகளை முடித்துக்கொண்டு, இரவு 12 மணிக்குத்தான் ஹோட்டலுக்கு வந்தேன். அப்போதுதான் என்னிடம் அங்கு ஸ்டாலின் தங்கியிருக்கும் தகவலையே சொன்னார்கள். அவர் காலை 7.30 மணிக்கே கிளம்பிச் சென்றுவிட்டார். நான் 8.30 மணியளவில் சென்றேன். இதனை நீங்கள் என்னிடம் தொலைபேசியில் கேட்டிருந்தால் நான் சொல்லியிருப்பேன். அதனைவிட்டு தொலைக்காட்சியில் விவாதம் நடத்தியிருக்கிறீர்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் நான் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, பாஜக தமிழக தலைவர் தமிழிசையும் அங்கு தங்கியிருந்தார். இதனைப் பற்றி ஏன் விவாதம் நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய தினகரன், ஒரே ஹோட்டலில் பல தலைவர்கள் ஒரே நேரத்தில் தங்குவது சாதாரணமானதுதான் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version