சினிமா செய்திகள்

தெலுங்கில் வசூலை அள்ளிய ‘வாத்தி’.. தமிழ்நாட்டில் வாகை சூடியதா?

Published

on

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிப்ரவரி 17 அன்று வெளிவந்த திரைப்படம் வாத்தி. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருந்தார். மேலும், சமுத்திரக்கனி,சாய் குமார், ஆடுகளம் நரேன், தனிகெல்லா பரணி, கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தனுஷ், வெங்கி

இந்த வருடத்தில் கடந்த வாரம் வரை 29 நேரடி தமிழ் படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் விஜய் நடித்துள்ள வாரிசு, அஜீத்குமார் நடிப்பில் வெளியான துணிவு, கவின் நடிப்பில் வெளியான டாடா படங்கள் மட்டுமே திரையரங்குகளில் கூட்டத்தைக் குவித்து கல்லாவை நிரப்பி கோடிகளைக் குவித்த படங்களாகும்.

மற்ற படங்கள் எல்லாம் வந்தவேகத்தில் திரையரங்குகளிலிருந்து வெளியேறின. அதிகபட்ச சம்பளம் கிடைக்கிறது என்பதற்காகத் தெலுங்கில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் வாத்தி. பின்னர் அதனை தமிழ் – தெலுங்கு என மாற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் 11 கோடி ரூபாய்க்கு வாங்கி 17 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தார்.

தனுஷ்

சுமார் 40 கோடி ரூபாய் திரையரங்குகளில் வசூல் ஆனால் தான் 17 கோடி ரூபாய் விநியோகஸ்தர்களுக்கு கிடைக்கும். அதன் பின்னர் வசூலாகும் தொகைதான் லாபமாகக் கிடைக்கும் என்கிற குழலில், பிப்ரவரி 17 அன்று சுமார் 450 திரைகளில் தமிழ்நாட்டில் வெளியானது. முதல் நாள் 6.80 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த வாத்தி அடுத்தடுத்த நாட்களில் கூடுதல் வசூல் கணக்கை எட்டியது.

முதல் வார முடிவில் தமிழ்நாட்டில் சுமார் 40 கோடி ரூபாய் மொத்த வசூலைக் கடந்து லாப கணக்கைத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தலையீடு அல்லது உதவி இல்லாமல் படத்தின் வியாபாரத்தை முடித்து, வெளியிட முடியும் என்பதை வாத்தி படத்தின் மூலம் செவன்ஸ்கிரீன் லலித்குமார் நிரூபித்திருக்கிறார். இதனால் தமிழ் சினிமாவில் விநியோக தொழில் புத்துணர்ச்சி பெறும் என்கிறது விநியோகஸ்தர்கள் வட்டாரம்.

Trending

Exit mobile version