இந்தியா

திடீரென நடு வழியில் நிறுத்தப்பட்ட டெல்லி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்.. என்ன காரணம்?

Published

on

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னைக்கு கிளம்பிய டெல்லி-சென்னை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென ராஜஸ்தானில் உள்ள தோல்பூர் என்ற ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. டெல்லி-சென்னை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில் ராஜஸ்தான் மாநிலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென இந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக பயண்இ ஒருவர் தெரிவித்தார்.

அவர் கூறியதை மற்ற இரண்டு பயணிகளும் உறுதி செய்ததை அடுத்து உடனடியாக ரயிலை நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. ரயிலில் இருந்த அந்த பயணிகள் தங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் இதனை அடுத்து ரயில்வே அதிகாரியிடம் அவர்கள் கூறியதாகவும் கூறப்படுகிறது.

அந்த பயணிகள் தெரிவித்ததை அடுத்து அந்த கோச் முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. ஜிஆர்பி போலீஸ் மற்றும் ஆர்பிஎப் போலீஸ் படைகள் வெடிகுண்டு இருப்பதாக கூறப்பட்ட கோச் முழுவதும் சோதனை வேட்டையை நடத்தினர். மேலும் வெடிகுண்டு செயலிழ்க்கும் படைக்கும் தகவல் அனுப்பப்பட்டு அவர்களும் வரவழைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜி2 கோச்சில் தான் வெடிகுண்டு இருக்கிறது என்று கூறப்பட்டாலும் ஜி3, ஜி4 என மூன்று பெட்டிகளிலும் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என்பதும் மூன்று பெட்டிகளிலும் முழுமையான சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்த பின்னர் ரயிலில் எந்த விதமான வெடிபொருளும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே ரயிலை முன்னோக்கி செல்ல அதிகாரிகள் அனுமதி அளித்தனர். மேலும் வெடிகுண்டு குறித்து வதந்தி பரப்பியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அவர்கள் என்ன காரணத்திற்காக இந்த வதந்தியை கிளப்பினார்கள்? அல்லது அவர்களுக்கு தவறான தகவல் கிடைத்ததால் இந்த தகவலை ரயில்வே துறையினர்களிடம் கூறினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரணமாக ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

seithichurul

Trending

Exit mobile version