விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல்: தங்கம் வென்று அசத்திய கடலூர் பெண்!

Published

on

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தூப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 541 வீரர், வீராங்கணைகள் கலந்துகொள்கின்றனர். இதில் பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் 251.7 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடித்தார். இவருக்கு அடுத்தபடியாக பிரிட்டனைச் சேர்ந்த மெக்கின்டோஷ் சியோனைட் 250.6 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடமும், தைவானைச் சேர்ந்த லின் யிங்-ஷின் 229.9 புள்ளிகள் எடுத்து மூன்றாமிடமும் பிடித்தார்.

இளவேனில் வாலறிவன் தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார். ஆனால் இவர் தமிழகத்தின் கடலூரை பூர்வீகமாக கொண்டவர். இளவேனில் கடந்த ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் தற்போது முதன்முறையாக சீனியர் பிரிவில் கலந்துகொண்ட இளவேனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version