கிரிக்கெட்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி விழாவா? அரசிடம் அனுமதி கேட்க திட்டம்!

Published

on

2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றதை அடுத்து வெற்றி விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ஏற்கனவே 3 முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போது நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் சென்னை அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று இறுதிப்போட்டி முடிந்ததும் பேட்டியளித்த தல தோனி ’சென்னை அணிக்காக விளையாடுவதை விட வேறு சந்தோஷம் தனக்கு இல்லை என்றும், அடுத்த ஆண்டும் கண்டிப்பாக சென்னையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடுவேன் என்றும், ஆனால் அதே நேரத்தில் மேலும் இரண்டு அணிகள் ஐபிஎல் தொடரில் இணைய உள்ளதை அடுத்து பிசிசிஐ என்ன மாதிரியான விதிகளை கொண்டு வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாம்பியன் பட்டத்தை பெற்றதை அடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட்டம் நடத்த சென்னை அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிகளுடன் வெற்றி கொண்டாட்டத்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அப்படி வெற்றி கொண்டாட்டம் நடந்தால் ஏராளமான சென்னை ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version