கிரிக்கெட்

ரத்து செய்யப்பட்ட தொடர்.. தென் ஆப்ரிக்கா-ஆஸ்திரேலியா இடையே வெடித்த மோதல்.. ஐசிசியிடம் புகார்

Published

on

ஜோகன்ஸ்பர்க்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தை ரத்து செய்ததையடுத்து தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தென் ஆப்ரிக்க அணி புகார் கொடுத்துள்ளது.

வரும் மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் உள்ளிட்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொண்டு இருந்தன. ஆனால் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும் தென் ஆப்ரிக்காவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும் அந்த தொடரை ரத்து செய்வதாக இந்த மாதம் 2ம் தேதி ஆஸ்திரலிய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்தது.

அப்போதே தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் கடும் அதிருப்தியை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அந்த இழப்பை ஈடுகட்ட ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் உடன் ஒருநாள் மற்றும் டி20 தொடரும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இப்போது இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியிடம் தென் ஆப்ரிக்கா அணி முறையிட்டுள்ளது.

கிரிக்கெட் சவுத் ஆப்ரிக்காவின் இடைக்கால தலைவர் ஸ்டாவ்ரோஸ் நிக்கோலாவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசுகையில் ஆஸ்திரேலியாவின் இந்த ஒருதலை பட்சமான முடிவால் முற்றிலும் ஏமாற்றம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்த ஆஸ்திரேலியாவின் அச்சத்தை கவனத்தில் கொண்டு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் பல மாதங்களாக அதற்காக பணியாற்றியுள்ளோம். அப்படி இருந்தும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்து என்று ஆஸ்திரேலியாவிடம் இருந்து கடிதம் வந்தது அதிர்ச்சியாக இருந்தது என்றார். மேலும் ஆஸ்திரேலியா முன்வைத்த காரணங்கள் நம்பத்தகுந்தவை அல்ல என்றும் நிக்கோலாவ் கூறினார்

தென் ஆப்ரிக்காவின் இந்த புகாரின் மூலம் ஐசிசியிடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகளை பெற முயல்வதாக கூறப்படுகிறது. ஏனெனில் நிதி சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளால் ஏப்ரல் 30 க்குள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான மற்றொரு டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்கா அணியால் நடத்த முடியாது. இதனால் ஆஸ்திரேலிய அணி ரத்து செய்த தொடருக்கான இழப்பீடு கேட்கலாம் என கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை ரத்து செய்ததால் நியூசிலாந்து அணி நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றொரு அணி எது என்பது இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர் முடியும் போது தெரியவரும் .

author avatar
seithichurul

Trending

Exit mobile version