கிரிக்கெட்

விருவிருப்பான கடைசி ஓவர்: முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!

Published

on

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் விருவிருப்பான கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது மும்பை அணி.

#image_title

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய அக்சர் பட்டேல் 25 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். கேப்டன் டேவிட் வார்னர் 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து சொதப்பினர்.

மும்பை அணியின் ஜாசன் பெஹ்ரெண்ட்ராஃப் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு மும்பை அணி களமிறங்கியது. கேப்டன் ரோஹித் ஷர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 65 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷான் 31 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய திலக் வர்மாவும் தன் பங்கிற்கு 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய அன்ரிச் நோர்டியா துல்லியமாக பந்துவீசி முதல் 5 பந்துகளுக்கு 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மும்பை அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கினார். இதனால் மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் டெல்லி அணியின் கவனக்குறைவால் மும்பை அணியின் டிம் டேவிட் கடைசி பந்தில் துரிதமாக ஓடி 2 ரன்கள் எடுத்து அணியை முதல் வெற்றிக்கு அழைத்து சென்றார்.

டெல்லி இன்னும் சற்று கவனமாக செயல்பட்டிருந்தால் கடைசி பந்தில் ரன் அவுட் செய்து போட்டியை சூப்பர் ஓவருக்கு சென்றுகொண்டிருக்கலாம். ஆட்டம் இதனால் இன்னும் விருவிருப்பாகி இருக்கும். இந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி 4 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. டெல்லி அணியின் முகேஷ் குமார் 2 விக்கெட் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது 65 ரன்கள் எடுத்த மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version