உலகம்

குழந்தைக்கு டிக்கெட் எடுக்க சொன்னதால் விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர்.. போலீசார் அதிர்ச்சி!

Published

on

குழந்தையுடன் விமான பயணம் செய்ய திட்டமிட்ட தம்பதிகள் குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் வலியுறுத்தியதால் விமான நிலையத்திலேயே குழந்தையை விட்டு விட்டுச் செல்ல தம்பதிகள் முயன்றதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் உள்ள எந்த ஒரு தம்பதிக்கும் குழந்தை என்பது ஒரு வரம் என்பதும் அந்த குழந்தைக்காக எதையும் செய்ய அவர்கள் தயாராக இருப்பார்கள் என்பது தெரிந்தது. ஆனால் டெல் அவில் என்ற நகரில் இருந்து பிரஸ்ஸல்ஸ் என்ற நகருக்கு சென்று கொண்டிருந்த தம்பதிகள் தங்கள் குழந்தைக்கு டிக்கெட் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனை அடுத்து விமான நிலைய அதிகாரிகள் போக்குவரத்து கொள்கையை சுட்டிக்காட்டி குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் இதுவரை தாங்கள் தங்கள் குழந்தைக்கு டிக்கெட் எடுக்கவில்லை என்று தம்பதிகள் வாதாடிய நிலையில் விமானத்தைப் பொறுத்து இது வேறுபடும் என்றும் எங்கள் விமானத்தை பொருத்தவரை குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிகிறது.

இந்தியாவை பொறுத்தவரை ஏர் இந்தியாவில் பெரியவர்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் 10% குழந்தைகளுக்கு வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வெளிநாடுகளில் ஒரு சில விமானங்களில் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றால் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கிறது.

இந்த நிலையில் குழந்தைக்கு டிக்கெட் எடுக்க பணம் இல்லை என்ற காரணத்தினால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு செல்ல தம்பதிகள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. செக்கிங் பகுதிக்கு வந்த அவர்கள் தங்கள் லக்கேஜ்களை எல்லாம் சோதனை செய்யும் படலம் முடிந்த பிறகு குழந்தையை விமான நிலையத்தின் ஒரு பகுதியில் உட்கார வைத்துவிட்டு நைசாக நகன்றதாக தெரிகிறது.

ஆனால் விமான நிலைய அதிகாரி இதனை கண்டுபிடித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். காவல் துறையினர் விரைந்து வந்து அந்த தம்பதியை விசாரணை செய்தபோது அந்த கல்நெஞ்ச பெற்றோர் குழந்தைக்கு டிக்கெட் எடுக்க பணமில்லை என்பதற்காக குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு செல்ல திட்டமிட்டுவதாக தெரிகிறது.

இப்படி ஒரு நிகழ்வை நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்றும், குழந்தையை விமான நிலையத்தில் விட்டு செல்ல எப்படி அந்த பெற்றோர்களுக்கு மனம் வந்தது என்றும் விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் அந்த தம்பதிகளிடம் தீவிரமாக விசாரணை செய்து வருவதாகவும் கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version