கிரிக்கெட்

கொரோனாவால் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு: ஐபிஎல் போட்டிகள் ரத்தா?

Published

on

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் விதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-22 சீசனுக்கான ரஞ்சி டிராபி, கர்னல் சி.கே நாயுடு டிராபி, சீனியர் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் வரும் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளும் ரத்தாகும் அல்லது ஒத்தி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் பிசிசிஐ, ஐபிஎல் போட்டி குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி 10 அணிகளுடன் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி மாதம் அனைத்து அணிகளுக்குமான ஏலம் விடப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீரர்களை ஏலம்விடும் நிகழ்ச்சியும் ஒத்தி வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தவுடன் கடந்த ஆண்டு போலவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஒருவேளை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்தால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version