இந்தியா

கொரோனா தடுப்பூசி போடுவதில் பாரபட்சமா..?: ராகுல் காந்தி சரமாரி கேள்வி

Published

on

கொரோனா வைரஸ் தொற்று தோன்றியதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1.15 லட்சம் பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவின் முதல் அலையைவிட கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசும், கொரோனாவின் இரண்டாவது அலை அடுத்த நான்கு வாரங்களுக்கு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. 

இப்படியான சூழலில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தற்போதைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தவதில் சிக்கல் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு ராகுல் காந்தி கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். 

முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர், தங்கள் மாநிலங்களில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உதவி புரிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இது மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கம் இடையில் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‘கொரோனா தடுப்பூசியின் முக்கிய நோக்கம் என்பது இறப்பு விகிதத்தைக் குறைப்பது தான். உலகிலேயே மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் நம் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் வயதானவர்கள் மற்றும் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். 

இந்தியாவில் முதலில் சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் உட்பட முன் களப் பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி கொடுத்தது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை இந்திய அளவில் சுமார் 8 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. 

இப்படியான சூழலில் அரசின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் சுணக்கம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள ராகுல் காந்தி, ‘யாருக்கு கொரோனா தடுப்பூசி தேவை என்பது குறித்த விவாதம் மிகவும் மோசமானது. அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக வாழ வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்’ என்று கூறி, நாட்டில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். 

Trending

Exit mobile version