இந்தியா

‘கொரோனா தடுப்பூசி தயாரிக்க 10 நிறுவனங்கள் தயாரா இருக்கு… ஆனா மோடி அரசு அனுமதிக்கல்ல’

Published

on

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்க இந்தியாவில் 10 நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும், அவற்றுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ரூ.700 முதல் 1,500 வரை தனியார் மருத்துவமனைகள் கட்டணமாக நிர்ணயித்துள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட இது 6 மடங்கு அதிகமாகும்.

சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டை ரூ.700 முதல் 900 வரையிலும், பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவேக்ஸின் மருந்தை ரூ. 1,250 முதல் ரூ. 1,500 வரையிலும் கட்டணமாக வசூலிக்கின்றனர். பெரும்பாலான நாடுகள் தடுப்பூசியை இலவசமாகப் போடுகின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் தனியார் பலன் பெறும் நோக்கில் மத்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மக்கள் தொகை 138 கோடி. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 94 கோடி. இவர்களுக்கு 2 டோஸ்கள் தடுப்பூசிகள் போட 188 கோடி டோஸ்கள் தேவை. கடந்த மே 8 ஆம் தேதி நிலவரப்படி, 2 டோஸ்கள் போட்டவர்கள் 3 கோடி 42 லட்சம். அதாவது, 3.6 சதவிகிதம். 1 டோஸ் மட்டும் போட்டவர்கள் 13 கோடியே 31 லட்சம். ஆக மொத்தம் ஏறத்தாழ 20 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இந்நிலையில், 2 தனியார் நிறுவனங்களின் உற்பத்தியை வைத்துப் பார்க்கிற போது, கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிருக்காக போராடும் மக்களை மத்திய அரசு காப்பாற்றுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகும். இன்றைக்குத் தடுப்பூசி போடும் அளவு ஒரு நாளைக்கு 17 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதே நிலை நீடித்தால் 94 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட 1,000 நாட்களாகிவிடும். அதாவது, 3 ஆண்டுகள் ஆகிவிடும்.
முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி டோஸ் போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை மே 1 முதல் 7 ஆம் தேதி வரை தினமும் சராசரி 16.6 லட்சமாக குறைந்துள்ளது. ஏப்ரலில் தினமும் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் அடிப்படையில் பார்த்தால், தற்போது நடைபெற்று வரும் தடுப்பூசி போடும் பணி முடிய இன்னும் 3 மாதங்கள் ஆகும்.

சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி டோஸ் உற்பத்தித் திறன் மாதம் ஒன்றுக்கு 6 கோடியாகவும், பாரத் பயோடெக் தடுப்பூசி டோஸின் உற்பத்தித் திறன் மாதம் ஒன்றுக்கு 2 கோடியாகவும் உள்ளன. தோராயமாக இரு நிறுவனங்கள் மூலம் தினசரி 26 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு ஜூலை மாதம் வரை காத்திருக்க வேண்டும். தடுப்பூசி டோஸ்களை இறக்குமதி செய்வதன் மூலமே இத்தகைய பற்றாக்குறையைப் போக்க முடியும்.

மோடி அரசோ எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றி அலட்சியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க 10க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளன. அவர்களது உற்பத்தியை முடுக்கிவிட்டால் மட்டுமே, நாடு முழுவதும் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.

கொரானாவின் இரண்டாவது அலையில், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் டோஸ் போட்டவர்களுக்கே இன்னும் இரண்டாவது டோஸ் போடவில்லை. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்றைக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் கலந்த கேள்வி எழுகிறது. எனவே, கடந்த கால மத்திய ஆட்சியாளர்களின் அனுபவத்தை எடுத்துக் கொண்டு, கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு, இனியாவது முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

seithichurul

Trending

Exit mobile version