தமிழ்நாடு

மன்னார்குடியில் கொரோனா தடுப்பூசி இல்லை – அரசு மருத்துவமனை விளம்பரத்தால் பரபரப்பு!

Published

on

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகின்றது. இப்படியான சூழலில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக சில அரசியல் கட்சி தரப்புகள், நாட்டில் 18 வயது கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. இதை ஏற்க மறுத்து கருத்து தெரிவித்துள்ளது அரசு. இது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு பல ஆலோசனைகளைக் கடிதம் மூலம் வழங்கி இருந்தது. அதில் முக்கியமானது, ’45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் கொரோனா தடுப்பூசியைத் தற்போது செலுத்தி வருகிறோம். ஆனால், கொரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருவதால், நம்முடைய தடுப்பூசி செலுத்தும் முறையைப் போர்க்கால அடிப்படையில் வேகப்படுத்தி, மாற்றி அமைக்க வேண்டும். ஆதலால், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு அனுமதியளிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தது.

மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசி இருப்புக் குறைவாக இருப்பதே இப்படியான நிலைப்பாட்டுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் மன்னார்குடியில் இருக்கும் அரசு மருத்துவமனையில், கொரோன தடுப்பூசி இல்லை என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக எம்.எல்.ஏ, டி.ஆர்.பி ராஜா, தன் ட்விட்டர் பக்கத்தில், ‘மன்னார்குடி யில் அமைந்துள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, மற்றும் நகர சுகாதார மருத்துவ நிலையத்திலும் ஞாயிறு (11/04/2021) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை தடுப்பூசி இருப்பு இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்!’ என அதிர்ச்சிகர தகவலுடன் போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Trending

Exit mobile version