உலகம்

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 29 பேர் பலி – வெளியான அதிர்ச்சித் தகவல்

Published

on

உலகையே ஓராண்டாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு, சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கோவாக்ஸின்’ ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளும் நேற்று முதல் பொதுப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த தடுப்பூசித் திட்டத்தின்படி ஒருவருக்கு, இரண்டு டோஸ்கள் மூலம் ஊசி போடப்படும். முதல் டோஸ் போடப்பட்ட 28 நாட்களுக்குப் பின்னர் இரண்டாவது டோஸ் ஊசி போடப்படும்.

இந்த இரண்டில் கோவாக்ஸின் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், அந்த தடுப்பு மருந்து இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை முடிக்கவில்லை என்பதால்தான்.

இந்நிலையில் நார்வே நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 29 பேர் இறந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது. அங்கு பிஃபைசர் மற்றும் பயோஎன்டெக் எஸ்.இ ஆகிய நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்து மட்டுமே தற்போதைக்கு அவசரத் தேவைக்குப் பயன்படுத்த நார்வே அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுவரை நார்வேயில் 42,000 பேருக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 29 பேர் தடுப்பூசியின் பக்க விளைவுகளால் இறந்துள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி இறந்தவர்களில் அனைவரும் வயது மூத்தவர்களாகவே இருந்துள்ளனர் என்றும், அவர்களுக்கு அதிக ஆரோக்கிய குறைபாடுகள் இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

‘கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு, மயக்கம் வருவது, வாந்தி வருவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் காய்ச்சல் ஏற்பட்டு, பல்வேறு அலர்ஜிகளும் வந்துள்ளன. அவர்களுக்கு இருந்த ஆரோக்கிய குறைபாடு மேலும் மோசமடைந்து இறந்துள்ளனர்’ என்று நார்வே சுகாதாரத் துறை தகவல் கூறுகிறது.

நார்வே நாட்டில் மட்டும் தான் இதுவரை இப்படியான அதிர்ச்சிகர தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு 19 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. அதில் 21 பேருக்கு மட்டும் தான் மிக அதிக அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக தகவல்.

ஆஸ்திரேலிய அரசு, நார்வேயில் பயன்படுத்தப்பட்ட பிஃபைசர் தடுப்பூசியின் 1 கோடி டோஸ்கள் தங்களுக்கு வேண்டும் என்று ஆர்டர் செய்திருந்தது. தற்போது அதனால் இறப்புகள் ஏற்படுவதாக தகவல் வந்த நிலையில், அந்நாட்டு அரசும் இந்த தடுப்பூசி மருந்தை பயன்படுத்த அச்சம் தெரிவித்து வருகிறது. இந்தியாவிலும் கோவாக்ஸின் மருந்தை பயன்படுத்த, இதே காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version